Story

Story

கரோனா ஊரடங்கு சிறப்பு சிறுகதை..

உங்கள் விமர்சனங்கள் பகிரவும் நண்பர்களே..

காதல் கரோனா...

என்.சுவாமிநாதன்

ஏவே சுந்தரம் ஒருவாய் காப்பித்தண்ணியாச்சும் வாயில விடாமுடே...இப்பவோ, அப்பவோ என மரணப்படுக்கையில் இருக்கும் சுந்தரத்தின் அம்மை தட்டுத்தடுமாறி வாய்மலர்ந்தார்..ம்ம்ம்ம்...கொட்டிக்கொண்டே விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரம்.

காதோரம் போட்டிருக்கும் நரையும், நடுத்தலையில் உதிர்ந்து வாழ்க்கையில் பாதியை கடந்துவிட்டதை குறியீடாய் காட்டும் வழுக்கையுமாக சலனமின்றி அமர்ந்திருந்தான் சுந்தரம். காலையில் தூங்கி முழித்ததுமே சம்மணம்கொட்டி உட்கார்ந்து வலதுகையில் சுதா போட்டுத்தந்த டீயைக் குடித்துக்கொண்டே, வீட்டுக்கு வரும் தினமணியை இடதுகையால் புரட்டிக்கொண்டிருப்பான். இன்று வீட்டுக்குவந்த நாளிதழ் மடிப்பு களையாமல் கிடக்கிறது. இந்தவாரம் முழுவதும் அந்த பேப்பர்கள் அப்படித்தான்!

சுந்தரம் காபிகுடித்துக் கொண்டிருக்கும்போதே சுதா சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குப்போய் வந்திருப்பாள். ‘இன்னாருங்க..பிரசாதம் வைச்சுருக்கேன். குளிச்சுட்டு வந்து பூசுங்க..’என சொல்லிவிட்டே சமையல்வேலைகளில் மூழ்கிப்போவாள் சுதா. ம்ம்...கொட்டும் சுந்தரம் குளித்து, சாப்பிட்டுவிட்டு தன் டி.வி.எஸ் பிப்டியை கிளப்பிக்கொண்டு மகள் புவனாவை பஸ்ஸ்டாப்பில் விடப்போவான். நாகர்கோவிலில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் தன் ஒரேமகள் புவனாவை தினமும் பேருந்து நிறுத்தத்தில்விட்டு, பஸ் ஏற்றிவிட்டு வந்து மீண்டும் தினமணிக்குள் மூழ்குவான் சுந்தரம்.

படித்தமெல்லாம் பெருசா இல்லை. ஒன்பதாம்கிளாஸ் படிக்கும்போது குடும்பத்தோடு கன்னியாகுமரி போனபோது பேருந்து நிறுத்தத்தில் பஸ்க்காக காத்திருந்தது சுந்தரத்தின் குடும்பம். அவனது அப்பா சுப்பையா முன்னாள்நின்று கைகாட்ட, பிரேக் பிடிக்காத அந்த அரசுபேருந்து சுப்பையாவின் மீது ஏறி நின்றது. அதில் எழுபது சதவிகித மாற்றுத்திறனாளியானார் லோடுமேன் சுப்பையா. படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு நாகர்கோவில் துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலைக்குப் போனான் சுந்தரம். டி.வி.எஸ் பிப்டி வாங்கவே இருபது ஆண்டுகள் உழைக்க வேண்டி இருந்த சுந்தரத்துக்கு இனி அதைமாற்றிவிட்டு ஹோண்டா ஆக்டிவா வாங்கும் ஆசை நிறைவேற எத்தனை வருசம் ஆகுமோ? ‘வயசுக்குவந்த பிள்ளையை வீட்ல வைச்சுகிட்டு..புதுபைக்குக்கு பணத்தை முடக்க முடியுமா?’ என சுதாவும் வியாக்யானம் பேசுவா.

என்னங்க மனசுல ஏதோ கெடக்கு.. ஒருவாரமா நீங்க சரியில்ல.சுதா சொல்லிக்கொண்டே இட்லியும், தீயலும் கொண்டுவந்து வைத்தாள். இல்லட்டீ...புவனா...

புவனாக்கு என்னங்க? சுதாவின் முகத்தில் பதட்டம் கவ்வியிருந்தது..

அவளுக்கு ஒன்னும் இல்ல..அவகூட தினமும் காலேஜ்க்கு சேர்ந்து போவாளே சாரதா...
ஆமா அந்த பணக்காரவீட்டுப் பிள்ளை. அவளுக்கு என்ன?

அவ ஒருவாரமா காலேஜ்க்கு போகலை.

ஏனாம்? வீட்ல விடலட்டீ...என்னாச்சு?

அந்தபிள்ளை யாரையோ காதலிக்குதாம். அதுக்காக வீட்டோட அடைச்சு வைச்சுருக்காரு அவுங்க அப்பா.

அதுக்கு நமக்கு என்ன? நீங்க ஏன் மூஞ்சியில இவ்வளவு விரக்தியை தூக்கி வைச்சுருக்கீங்க..
அதில்லட்டி..அவுங்க அப்பா நேத்து பாத்தாரு. கடைக்கே தேடிவந்தாரு. உன்பிள்ளைகூட தானே, என் பொண்ணு போக, வர செய்வா. அவளுக்கு மனசுக்காத்த இப்படியொரு காதலு கிடக்குன்னா அதை உன் பொண்ணு சொல்லிருக்கலாம்ல..அவ என் கண்ணுல படட்டும் அப்புறம் இருக்குன்னு புவனாவை ரொம்ப திட்டிட்டாரு..

ம்ம்..பணக்கார வீட்டுப்பிள்ளைங்க ஏதும் செஞ்சாக்கூட பலியை எப்படி நம்ம பக்கம் திருப்புறாங்க பாருங்க..

அது அவருக்கு மனசுட்டி..இப்போ என்னோட ஓனரும் கோடீஸ்வரருதான். சம்பளத்துக்கு முன்னாடி அட்வான்ஸ் கேட்டா கொடுக்காரு. சிலநேரம் அதை சம்பளத்துல பிடிக்காமகூட சம்பளம் தந்துடுறாருலா..

ம்ம்..என்னவோ போங்க..நீங்க அதிலிருந்து வெளியே வாங்க. ம்ம்..டிவிஎஸ் பிப்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு, ஹார்னை அடித்தான் சுந்தரம்.

யாமுங்க? அந்த ‘தினமணி’ பேப்பரை எடுத்துட்டுவா.

ஜவுளிக்கடை ஓனரின் அப்பா டீச்சராக இருந்து ரிட்டயர்ட் ஆனவர். மதியம்கடையில் வந்து கொஞ்சநேரம் இருந்து போவார். அந்தகால தினமணிவாசகர். அவருக்கு மதியநேரத்தில் தலையங்கத்தை படித்துக்காட்ட வேண்டும். பொடி எழுத்து வந்துவிட்டாலும் கண்ணாடி போடமாட்டேன் என வைராக்கியத்தோடு இருப்பவர். தட்டுத்தடுமாறி காலையிலேயே வீட்டுக்குவரும் இந்துதமிழின் நடுப்பக்கத்தை படித்துவிடுவார். சுந்தரம் திணமணியை வாசித்துக்காட்ட வேண்டும்.

ர்ர்ர்ர்ர்ர்...சுந்தரத்தின் டி.வி.எஸ் பிப்டி புறப்பட்டது. ம்ம்..இந்த சாரதா பிள்ளையை அவுக வீட்ல என்னபாடு படுத்துகாளோ..முணுமுணுத்துக்கொண்டே மதியச்சமையலுக்கு தயாரானாள்.

சாரதா அந்த ரூமைவிட்டு வெளியே வரவே இல்லை. அங்கு இருக்கும் ஒன்றரை டன் ஏசியைக்கூட ஆன் செய்யவில்லை. பஞ்சுமெத்தை கட்டிலை புறக்கணித்து தலையணை இன்றி, தலைக்கு தன் கையை அடைகொடுத்து அந்த குளிர்ந்த டைல்ஸ் தரையில் படுத்துக்கொள்கிறாள். ஆனால் கதவினை தாழிட்டு இருப்பதால் அதுவும்கூட அவளது அப்பாவுக்கு தெரியப்போவது இல்லை.

அவர் தெரிந்துகொள்ளட்டும் என சாரதா போட்ட நாடகமும் இது இல்லை.

‘நமக்கு சொத்துமட்டும் இன்னிக்கு சந்தைவிலைக்கு 43 கோடிக்கு கிடக்கு. அப்பா ஓடியாடி சேர்த்தது. முழுசா உனக்கும், தம்பிக்கும் தானே? கல்யாண வயசா உனக்கு..இப்போ தானே டிகிரி பைனல் இயர் படிக்குற..மேக்கொண்டுபடி. கூட மூணு, நாலு வருசம் போட்டும். உனக்கு நல்ல பெரிய இடத்து மாப்பிள்ளையா பார்த்து கட்டிவைக்கேன்..’தோசையை சுட்டுகொண்டு வந்து சாரதாவுக்கு பாடம் எடுத்தாள் அம்மை கந்தம்மை.

எனக்கு தோசை வேணாம்..
அப்போ பட்டினி கிடந்து சாவியோ..
ம்ம்..

மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

கந்தம்மைக்கு சுர்ரென்று வந்தது. மூணுநாளா இந்த பிள்ளை அன்னம், தண்ணி இல்லாம கிடக்குங்க..இப்படியே போனா கொலைபாவத்துக்குத்தான் ஆளாகணும். அடுத்தவருசம் கன்னிக்கு வைச்சுக் கொடுக்க மாதிரி ஆகிடும்.

என்னட்டீ பேசுக நீ? கோபமானான் புருஷோத்தமன்.

நான் உள்ளதை சொல்லுகேங்க..

ம்ம்...

நாமளும் விடாப்பிடியா நிக்கணுமுட்டீ..உனக்கிட்ட நான் ஒருவிசயத்தை மறைச்சுட்டேன். அதுதெரிஞ்சா நீ அவளுக்கு பரிஞ்சு பேச மாட்ட..

என்னதுங்க?

நாமகட்டிவைக்க மாட்டோம்ன்னு..அவனுக்குகூட ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிருக்கா..

நெசமாத்தான் சொல்லுறீங்களா?

பின்ன, நான் இந்த காதல்விவகாரம் தெரிஞ்சு துப்பெடுத்துட்டேன். அவ பட்டினி கிடந்தே சாகட்டும்விடு.

இதுவரை கந்தம்மை அதைக் கேட்டதில்லை. காதலித்த பையனுக்கு கட்டிக்கொடுக்கக் கூடாது என எடுத்த நிலைப்பாடுதான் அதற்குக் காரணம். இப்போது கந்தம்மை மெல்ல கேட்டாள். ஏங்க ரிஜிஸ்ட்ர் மேரேஜ் பண்ணிட்டான்னு சொல்லுறீங்க..பையன் என்ன ஆளுங்க?

நம்மாளுதாமுட்டி..

இப்போது கந்தம்மை கொஞ்சம் சிரித்தமுகத்தோடு அப்புறம் என்னங்க? நேர்ல பேசி முடிச்சு ஒரு இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம்ன்னு சொல்லுவோம்.

அட சவத்துமூதி. நம்மாளுன்னாலும் அது கஞ்சிக்கு வழியில்லாத கூட்டம். அதுலயும் அந்த பையனுக்கு இரண்டு தங்கச்சிவேற. அப்பன் வேற ஒருகடையில் கணக்குத்தான் எழுதுறான். நம்ம இன்னோவால சுத்துறோம். அவனுக இன்னிக்கும் கவர்மெண்ட் பஸ்க்கு டைம்பார்த்து கிளம்புற கூட்டம்.

பையனை சாரிச்சிங்களா?

‘நல்லபையன்னுதான் சொல்லுறாங்க. ஆனா நல்லவனுக்கு கட்டிக்கொடுக்கணும்ன்னா பொண்ணை காந்தி, கலாம், காமராஜர்ன்னு யாருக்காச்சும்தான் கட்டிக்கொணும்’ கோபமாகச் சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார் புருசோத்தமன்.

மாருதி ஹோட்டலில் ரவாதோசை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் புருஷோத்தமன். சாரதாவின் ரூம்கதவைத் தட்டிய கந்தம்மை, ‘அப்பா சாப்பிட்டும் மூணுநாளு ஆச்சு. ஏற்கனவே சுகர் உள்ள மனுசன் பார்த்துக்கோ..’சொல்லிவிட்டு போனாள்.

அழுகுரல் சாரதாவிடம் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. புருசோத்தமனும் ஊரெல்லாம் பேசிவிட்டான். குலசேகரம் பக்கத்தில் ஒருவீட்டுக்கு கூட்டிப்போய், காதலனை மறக்க மருந்து ஒன்று வாங்கிக் கொடுத்தான். ஒரு செம்பு நிறைய தீர்த்த தண்ணீர்போல் இருந்த அந்த நீர மடக், மடக்கென குடிக்கச் சொன்னார் அந்த சாமியார். சில பூஜைகள் செய்தார். மூவாயிரம் கேட்ட சாமியாருக்கு, புருஷோத்தமன் கதை நடந்தால் போதும்சாமி என பவ்யமாக சொல்லிக்கொண்டே ஆறாயிரமாக நீட்டினார். அதிலிருந்து இரண்டேநாளில் போலி சாமியார் கைது என அவரது புகைப்படத்தைப் பார்த்த புருசோத்தமன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனான்.

கோயிலில் இருந்து, மனநல ஆலோசகர்வரை அழைத்துப் போயும் காதலில் நிலையாய் நின்றாள் சாரதா. மாருதி ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டே வீட்டில் பட்டினி இருந்தார் புருஷோத்தமன். எங்குமே சாப்பிடாமல் பட்டினி இருந்தாள் சாரதா.

‘ஏங்க சவத்தை விடுங்க. ஏதோ நம்மாளு பையனைத்தானே காதலிச்சுருக்கா. கஞ்சிக்கு வழியிட்டாத்தான் என்ன? நம்மகிட்ட எவ்வளவு சொத்து இருக்கு? ஒரு கடை,கன்னி வைச்சுகொடுத்துட்டு போறது’ என கந்தம்மை முதல்முறை சொன்னபோது கோபப்பட்ட புருஷோத்தமன் ஒருகட்டத்தில் புரிந்துகொண்டார்.

சாரதாவை அழைத்துப் பேசினார். பழச்சாறு கொடுத்து அவள் பட்டினிப்ப்போராட்டம் முடிவுக்கு வரப்பட்டது. ‘இந்தா பாருட்டீ..எனக்குன்னு சோசியல் ஸ்டேட்டஸ் இருக்கு. பிஸ்னஸ் பாட்னர்ஸ், ராயல் கஸ்டமர்ஸ், நம்ம சொந்தபந்தங்கள்ன்னு ஸ்டேட்டஸ் உள்ள ஆளுகூட்டம் வண்டி, வண்டியா இருக்கு. நீ எவனோ ஒருத்தனுக்கு. நாலு பேரு முன்னாடி கையெழுத்துப்போட்டா கல்யாணம் ஆகிடுமா?சவத்தை ஆசைப்பட்டுட்டா இனி ஜாம்..ஜாம்ன்னு நடத்துகேன். ஆனா அந்த மாப்பிள்ளை பய என்னை நிமிர்ந்துகூட பார்த்துராம..இதுவே என்னோட சோசியல் ஸ்டேட்டஸை மெயிண்டைன் செய்யத்தான்..’புருஷோத்தமன் படபடவென வெடித்தார்.

மகளின் ஆசையை மிஞ்சிய புருஷோத்தமனின் ஸ்டேட்டஸ் பல் இளித்தது.

நாகர்கோவிலிலேயே வாடகைகூடிய கெங்கா கிராண்ட்யூர் தொடங்கி, சமையலுக்கு நீலகண்டபிள்ளைவரை பார்த்து, பார்த்து புக் செய்தான் புருசோத்தமன். 200 பவுன் நகையை போட்டு, வர்றவன்லாம் மூக்குல விரல்வைக்கணும் சொல்லிக்கொண்டே இன்னோவாவை நகைக்கடை வாசலில் நிறுத்தினான் புருசோத்தமன். ஆனால் சாரதாவுக்கு அத்தனையும் செயற்கையாய் தெரிந்தது. சோசியல் ஸ்டேட்டஸ்..

22ம் தேதி கல்யாணம்..இன்னும் ஒருவாரம்தான் இருந்தது. தடபுடல் ஏற்பாடுகள் தீவிரமானது.

முந்தையநாள் அப்டா மார்க்கெட்டில் கறிக்காய் வாங்குவதிலிருந்து துவங்கி, அத்தனைக்கும் பணம்கொடுத்துவிட்டார். திடீரென வாட்ஸ் அப்களில் வைரலாக ஒருசெய்தி வந்து விழுகிறது. ‘இன்று இரவு 8 மணிக்கு மக்களுடன் பேசுகிறேன்’ என்னும் பிரதமரின் அறிவிப்புத்தான் அது!

புருஷோத்தமன் கொஞ்சம் டென்சன் ஆனார். ‘இப்படித்தான் ஓவர்நைட்ல ஒருநாளு நம்ம நோட்டெல்லாம் செல்லாதுன்னு சொன்னாரு. இன்னிக்கு என்னத்தை சொல்லப் போறாரோ..’கொஞ்சம் பதட்டத்தில் வியர்த்துத்தான் போனது புருசோத்தமனுக்கு..

22ம் தேதி ஊரடங்கு உத்தரவுக்கான அறிவிப்பை சொன்னார் மோடி.

அப்போ சாரதா கல்யாணம்?
அதிகார நிமித்தம் பணம்கொடுத்து புக் செய்த மண்படம் மூடப்பட்டது. டெலிவரிதேதி செல்லியிருந்த நகைக்கடை பூட்டப்பட்டது. கரோனாவின் அச்சத்தில் புருஷோத்தமனின் ஒயிட்காலர் பணக்காரர்கள் யாரும் திருமணத்துக்கு வரவில்லை. விமானம் மூலம் வந்துசேர்ந்திருக்க வேண்டிய பெருங்கூட்டம் கரோனாவுக்கு பயந்து வீடுகளுக்குள் முடங்கியது. பயணத்தை தவிர்ப்பது நல்லது என உலகநாடுகளே அறிவுறித்தி இருந்தது.

திருமணங்களை கோயிலிலோ, வீட்டிலோ பத்துபேருக்குள் நடத்திவிட வழிகாட்டியது அரசு. புருஷோத்தமனின் வீட்டிலேயே திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டில் இருந்து பதினைஞ்சு பேர், புருஷோத்தமன், கந்தம்மை சகிதம் முடிந்தது திருமணம்.
தாலிகட்டும் நேரத்தில் சாரதா மெல்ல பேசினாள். ‘அப்பா, கஞ்சிக்கு வழியில்லாத கூட்டத்துல இருந்து இத்தனைபேரு வந்துருக்காங்க. உங்க பணக்காரக்கூட்டம் எங்கபோச்சு? இதைவிட நாலுசுவத்துக்குள்ள நடந்த எங்க ரிஜிஸ்டர் மேரேஜ்க்குகூட ஆளுக வந்துருந்துச்சு..’என மகள் பேசுவதைக் கேட்ட புருஷோத்தமனின் முகம் சுருங்கிப்போனது. போன இடத்துல நம்மபிள்ளை அவுங்க வீட்டுசூழலை புரிஞ்சு நடந்துப்பா..என கந்தம்மைக்கு கொஞ்சம் சந்தோசம்தான்!

#TamilQuotes #besttamilquotes #quotes #corona #story 

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send