Smiling Face
சிறு புன்னகை நிகழ்த்துமே மாயாஜாலம்!
* 🌹🌹🌹ஒரு சிலர் எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் அதை வெகு சுலபமாக எந்த பிரச்னையும் இல்லாமல் முடித்து சாதித்து விடுவதைப் பார்க்கிறோம். மற்றும் சிலர் ஒரு சிறிய செயலையும் மிகவும் சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கிறது. அல்லது முடிக்க இயலாமல் சிரமப்படுவதை நாம் பார்க்கிறோம். ஒரு சிலருக்கு எளிதில் முடியும் விஷயம் வேறு சிலருக்கு மட்டும் ஏன் முடியாமல் போகிறது.
எந்த ஒரு செயலையும் நம்மால் எளிதில் சாதித்துவிட முடியும் என்ன எண்ணம் முதலில் நம் மனதில் எழவேண்டும். ஒரு செயலை நாம் முடிக்க அதற்கான வழிமுறைகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். கூடவே ஒரு விஷயத்தையும் நாம் கையாளவேண்டும். அது புன்னகை. ஒரு புன்னகை பல மாயாஜாலங்களைக் செய்யும்.
உலகில் ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இருந்தாலும் புன்னகை என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். ஒருவர் வாழ்வின் முன்னேற்றத்தில் புன்னகையின் பங்கு அபாராமானது.
ஒரு அலுவலகத்திற்குச் செல்லுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். அது சம்பந்தப்பட்டவரைச் சந்தித்து புன்னகையோடு வந்த விஷயத்தை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். புன்னகை அவர் மனதில் உங்கள் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தைத் தோற்றுவிக்கும். உங்கள் வேலையும் எளிதில் முடியும்.
உங்கள் அலுவலகத்தில் யாராவது தவறு செய்துவிட்டால் அவர் மீது நீங்கள் கோபப்படாதீர்கள். அவரை அழைத்து புன்னகையோடு “இனி இப்படிச் செய்யாதீர்கள் கவனமாக இருங்கள்” என்று அறிவுறுத்துங்கள். உங்கள் புன்னகையோடு கூடிய அறிவுரை அவர் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இரண்டொரு முறை இப்படிக் கூறியும் அவர் தன் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை எனில் பின்னர் உங்கள் கோபத்தை அவரிடம் வெளிப்படுத்தலாம்.
சிலர் எப்போதும் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அத்தகையவர்கள் நமக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் கூட அவர்களை நமக்குப் பிடிக்காமல் போய்விடுவதை நாம் உணர்கிறோம். இதற்குக் காரணம் அவர்களின் கோபமான முகபாவனையே. சிலர் எப்போதும் புன்னகை பூக்கும் முகத்துடனே வலம் வருவதையும் பார்த்திருக்கிறோம். அத்தகையவர்களோடு நமக்கு நட்பு பாராட்டத் தோன்றும். இது இயற்கையான உணர்வும் கூட.
புன்னகை என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. மகிழ்ச்சியை யார்தான் விரும்பமாட்டார்கள். புன்னகை மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கிறது. இதயநோய் மற்றும் மனோவியாதிகளை வராமல் தடுக்கவும், உடல் இயக்கத்தைச் சீராக வைத்திருக்கவும் புன்னகை உதவுகிறது. மேலும் புன்னகைக்கும்போது நமது மூளையில் உள்ள ஹார்மோன்கள் சீராக சுரக்கின்றன. இது உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் சீராக்கி கட்டுக்குள் வைக்கின்றன. ஒருவரின் புன்னகை அவருக்கு மட்டுமல்ல அவரைச் சுற்றியுள்ள அனைவர் மனதிலும் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது. புன்னகைக்கும் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நமது மனமானது மகிழ்ச்சியாக இருக்கும்போது நமது மூளையில் “என்டோர்ஃபின்ஸ்” என்ற ஹார்மோன் சுரக்கிறது. இவ்வாறு சுரக்கும் ஹார்மோனே புன்னகையை உருவாக்குகிறது. புன்னகைக்கும்போது நமது மனமானது மகிழ்ச்சியாக இருப்பதாக உணரவைக்கிறது.
எப்போதும் புன்னகைத்துக்கொண்டே இருப்பவர்களை இந்த உலகம் விரும்புகிறது. பல புதிய நட்புகள் பூக்கவும் புன்னகை காரணமாகிறது.
எப்போதும் புன்னகைத்தவாறே இருக்கும் குழந்தையானது வளர வளர தன் புன்னகையின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வரும். இது இயற்கையான நிகழ்வுதான். துன்பமான சூழலில் புன்னகைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் மனஇறுக்கத்தைக் குறைத்து பிரச்னைகளை எதிர்த்துப் போராடும் மன வலிமையை உங்களுக்குத்தரும்.
புன்னகைப்போம். இதன் மூலம் நம்மைச் சுற்றி உள்ளவர்களை புன்னகைக்க வைப்போம். ஒரு புன்னகை பல நட்புகளை நமக்கு பரிசாகத்தரும். மன இறுக்கத்தைக் குறைக்கும். மற்றவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.
#life, #motivational, #update, #data, #share, #now, #tamil
Comments