People of Man

People of Man

 

மேன்மக்கள் மாண்பு...

அந்த அதிகாலைக் குளிர் நேரத்தில் சுறுசுறுப்பாக தன் அறையை விட்டு புறப்பட்டு வெளியே வந்தார் அப்துல்கலாம்.

வெளியே அவருக்காக காத்திருந்த அதிகாரிகளைப் பார்த்து ஒரு வெள்ளந்திப் புன்னகை.
தமிழ்நாட்டில் உள்ள குன்னூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக அங்கே வந்திருந்தார் கலாம்.

ஜனாதிபதியாக அவர்
இருந்த போது நடந்த சம்பவம் இது.
"நான் தயாராக இருக்கிறேன்.
நிகழ்ச்சிக்கு நாம் புறப்படலாமா?" என சிரித்தபடி தன் அருகிலிருந்த அதிகாரிகளிடம் கேட்டார் அப்துல் கலாம்.
அப்போது அவரை நெருங்கி வந்த ஒரு முக்கிய அதிகாரி ஏதோ ஒரு விஷயத்தை கலாம் காதருகில் சென்று சொல்ல அதைக் கேள்விப்பட்டவுடன் அவர் முகத்தில் இருந்தப் புன்னகை மாறி சற்றே பதட்டமானார்.

அருகில் நின்றிருந்த மற்ற அதிகாரிகளைப் பார்த்து சற்று இறுகிய முகத்துடன் கேட்டார்:
"இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை?"
இதை எதிர்பார்த்திராத அதிகாரிகள் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தார்கள்.
"எவ்வளவு முக்கியமான விஷயம் இது"என்றார் கலாம்.

அது இது தான்.
முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் மானேக்‌ஷா உடல்நலம் சரியில்லாமல் குன்னூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறாராம்.

உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் படுத்தப் படுக்கையாக இருக்கிறாராம்.
'யார் ஜான் இந்த மானேக்‌ஷா' என கேட்பவர்களுக்கு...

1971 இல் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் வெறும் 13 நாட்களில் பாகிஸ்தானைத் தோற்கடித்து சரணடைய வைத்த மாபெரும் சாதனையைச் செய்த ராணுவ தளபதி தான் இந்த ஃபீல்ட் மார்ஷல் மானெக்‌ஷா.
பல ஆண்டு காலமாக இந்திய ராணுவத்தில் சேவைகள் பல செய்து விருதுகள் பல பெற்ற பெருமைக்குரியவர்.

அவர் குன்னூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் தான் பதட்டமாகிப் போனார் கலாம்.
"இப்போதே நான் அந்த மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக மானெக்‌ஷாவை பார்த்தாக வேண்டும்.

அதற்குப் பின் நமது மற்ற நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ளலாம்."
ஆடிப் போனார்கள் அதிகாரிகள். ஏனெனில் ஒரு ஜனாதிபதியின் பயணத் திட்டத்தை அவ்வளவு சுலபமாக நினைத்தபடி எல்லாம் மாற்றி விட முடியாது. ஆனால் இதை எப்படி அப்துல் கலாமிடம் எடுத்துச் சொல்வது ?
இதற்குள் பொறுமை இழந்த அப்துல்கலாம், தனது வாகனத்தை தன் அருகில் வரும்படி சைகை செய்ய, வேறுவழியின்றி அப்துல் கலாம் விருப்பப்படியே அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தார்கள் அதிகாரிகள்.

மருத்துவமனைக்குள் பரபரப்பாக அப்துல் கலாம் நுழைவதைப் பார்த்ததும் படுக்கையில் படுத்திருந்த மானெக்‌ஷா திகைத்துப் போனார்.

தன்னைப் பார்ப்பதற்காகவே இந்திய ஜனாதிபதி அங்கு வந்திருக்கிறார் என்பது தெரிந்ததும் நெஞ்சம் நெகிழ்ந்துப் போனார்.
இதை அவர் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.
"எப்படி இருக்கிறீர்கள் ?"
அன்பான புன்சிரிப்போடு கேட்ட அப்துல் கலாம், ஆதரவோடு மானெக்‌ஷாவின் அருகில் வந்து அவர் கரங்களைப் பற்றிக் கொண்டார்.சுமார் பதினைந்து நிமிடங்கள் இருவரும் மனம் விட்டு பேசிக்
கொண்டார்கள்.

மகிழ்ச்சி பொங்கி வழியும் முகத்துடன் மானெக்‌ஷா சொன்னார் : "இவ்வளவு தூரம் சிரமம் எடுத்து என்னைப் பார்க்க வந்ததற்கு மிக்க நன்றி."
"அது என்னுடைய கடமை.
சரி. உடல் நலனை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். நான் போய் வருகிறேன்." புறப்படத் தயாரானார் அப்துல் கலாம்.

"அதற்கு முன் ஒரு முக்கியமான கேள்வி."
திடீரென கலாம் இப்படி கேட்டவுடன் என்ன என்பது போல் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தார் மானெக்‌ஷா.
"உங்களுக்கு இங்கு வழங்கப்படும் வசதிகள் எல்லாம் சவுகரியமாக இருக்கிறதா ?
ஒரு வேளை ஏதாவது மனக் குறைகள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் அதை உடனே சரி செய்து தரச் சொல்கிறேன்."
அப்துல் கலாம் இப்படிக் கேட்டவுடன் மானெக்‌ஷா முகம் கொஞ்சம் மாறியது.
அதைப் புரிந்து கொண்ட கலாம், "சொல்லுங்கள். உங்களுக்கு ஏதோ ஒரு மிகப் பெரும் மனக்குறை இருப்பதை உங்கள் முகம் தெளிவாக காட்டுகிறது. எதுவாக இருந்தாலும் தயவுசெய்து அதை என்னிடம் சொல்லுங்கள்."
மானெக்‌ஷா கண்கள் கலங்க அப்துல் கலாம் முகத்தையே உற்றுப் பார்த்தார்.

அதன் பின் குரல் தழுதழுக்க இப்படிச் சொன்னார் : "வேறொன்றுமில்லை. நான் எனது உயிரை விட அதிகமாக நேசிக்கும் இந்த நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஜனாதிபதியாகிய நீங்கள் என்னை சந்திக்க இங்கே வந்திருக்கிறீர்கள்.
ஆனால்...
அந்த ஜனாதிபதியே என்னை சந்திக்க வந்திருக்கும் இந்த நேரத்தில் கம்பீரமாக எழுந்து நின்று சல்யூட் செய்ய வேண்டிய நான், அப்படி செய்ய முடியாத நிலையில் இப்படி இங்குப் படுத்திருக்கிறேனே. இது ஒன்று தான் எனக்கு இருக்கும் ஒரே ஒரு மிகப் பெரிய மனக்குறை !"
இப்படிச் சொல்லிவிட்டு வழியும் கண்ணீரை துடைக்க கூடத் தோன்றாமல் படுத்திருந்தார் மானெக்‌ஷா.

அருகில் வந்து அவர் கைகளை ஆதரவோடு பற்றிக் கொண்டார் அப்துல் கலாம். ஆனால் அவர் கண்களும் கூட அவரையும் அறியாமல் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

இருவர் கண்களில் இருந்தும் வழிந்த அந்தக் கண்ணீர் இந்தியத் தாயின் பாதங்களை நனைத்தது.
தன்னையும் அறியாமல் மெய்சிலிர்த்தாள் பாரதத்தாய்.
மேன் மக்கள் மேன் மக்களே..!

நன்றி- முனைவர்.திரு.மணிநாதன்.

People of Man, #man, #life, #love # world

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send