Rubber
ரப்பரைக் கண்டுபிடித்த சார்லஸ்
குட் இயர்
ரப்பர் தொழிலின் தந்தை சார்லஸ் குட் இயர்.ரப்பரில் கந்தகத்தைச் சேர்த்துக் கெட்டியாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்.இவரைப் பித்துப் பிடித்தவர் என்று பலர் கூறினார்கள்.
இவருடைய கண்டுபிடிப்பு தற்செயலாக நடந்தது என்றார்கள்.யார் என்ன சொன்னாலும் அதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இவர் தொடர்ந்து செயலாற்றி வெற்றி பெற்றார்.
உத்தம சீலர்களை - மனிதப்புனிதர்களை - மங்காத மகான்களை - புண்ணியவான்களை நாம் வணக்கம் செலுத்த வேண்டும்.காரணம், அவர்கள் கண்டுபிடித்துத் தந்த பொருட்களை நாம் பயன்படுத்துவதற்காக! அவர்கள் நமக்காக எதனையும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் பொருட்கள் இல்லாமலே அல்லவா போயிருக்கும்.
சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திப்பதின் மூலமே சிறப்பு பெற முடியும். நாமும் விஞ்ஞானியாக மாற இயலும். ஒரு வரலாறு தான் இன்னொரு வரலாற்றை உருவாக்க முடியும். இது உலக நியதி! அதன் அடிப்படையில் - விஞ்ஞானிகளின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். விஞ்ஞானி என்றதுமே அவர் ஒரு ஞானியாகத்தான் தோன்ற முடியும்.
ஞானிகள் எப்பொழுதுமே நல்லதையே தான் சொல்வார்கள்; செய்வார்கள்!
சார்லஸ் குட் இயர் 1800 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஏழ்மையில் இருந்தனர். அதனால் இவர் பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை.
இளமையிலேயே உடல் உழைப்பை நம்பி பல இடங்களில் எடுபிடி வேலைகள் செய்தார். இவருடைய தந்தை இரும்புத் தொழிற்சாலையில் பணியாற்றினார். குட் இயரும், தந்தையின் தொழிற்சாலையிலே வேலைக்குச் சேர்ந்தார்.
தொழில் மந்தம் ஏற்படவே, தொழிற்சாலையை மூடும்படி ஆயிற்று! அதன் பயன் கடன் கட்ட வேண்டிய பொறுப்பு குட் இயர் தலையிலேயே விழுந்தது. கடனைக் கட்ட முடியாமல் போய்விடவே அவர் முதன் முதலாகச் சிறைக்குச் சென்றார்.
அப்பொழுது அவருக்குத் திருமணம் ஆகி ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையாகவும் இருந்தார். தன்னுடைய முப்பத்திரண்டாவது வயதிலேயே ரப்பர் ஆராய்ச்சியை மேற்கொண்டார். ரப்பர் செருப்பை நீண்ட நாள் வரை நன்றாக உழைக்கும்படி செய்வதற்கு வழி தேடினார்.
அவருடைய காலத்தில் ரப்பரால் செய்யப்பட்ட பொருள்கள் குளிரினால் வெடித்தும் வெய்யிலால் உருகியும் கெட்டுப் போயின! கந்தக அமிலத்தின் உதவியால் ரப்பரைக் கெட்டிப்படுத்திக் குறைகளை நீக்க முயன்றார். 1836 ஆம் ஆண்டில் இவர் ஒரு தொழிற் கூடத்தை வாடகைக்கு வாங்கி நடத்தினார்.
இவர் செய்த ரப்பர் துணிவகைகள் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமல் கிழிந்து விடவே, இவருடைய திட்டம் நிறைவேற முடியாமல் போய்விட்டது.எனவே நண்பருடன் கூட்டு சேர்ந்து வேலை செய்தார். ரப்பரையும் கந்தகத்தையும் வைத்துச் சில ஆராய்ச்சிகள் செய்து பார்த்தனர். பலனில்லை! குடும்பத்தையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்தார்.
குடும்பத்தினர் பாழடைந்த இடங்களில் வசித்துக் கொண்டு, துணையற்றவர்களாக வறுமையில் வாடி நோயுற்றனர். குட் இயரின் மைத்துனர் வீட்டில் அடைக்கலம் ஆனார்கள்.
1839 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாளன்று குட் இயர் குடும்பத்துடன் சமையலறையில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் அப்போது
அடுப்புக்கு அருகில் சோர்வுடன் உட்கார்ந்திருந்தார் குட் இயர் முப்பத்தெட்டாவது வயதிலேயே முதிய தோற்றமாய் காட்சி அளித்தார். கண் மங்கி அழுக்கு உடையுடன் எளிய நிலையிலிருந்தார்.
அவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரப்பரும் கந்தகமும் சேர்ந்த கலவையை இரும்பு அடுப்பின் மேலே போட்டார். அது அவர் எதிர்பார்த்தபடி நெகிழ்ந்து கொண்டிருந்தது.
அவருடைய மனதில் ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அந்தப் பிசின் போன்ற பொருளை வெளிப்புறத்தில் உள்ள பனியில் போட்டு வைத்தார். மறுநாள் காலையில் குட் இயர் அதைப் போய்ப் பார்த்தார் அது வளையும் தன்மை உடையதாக இருந்தது.
தோலைப் பதம் செய்வது போல் ரப்பரையும் பதம் செய்தார். வெப்ப தட்ப நிலையை தாங்கும்படியாகச் செய்வதற்கு முயன்றார். அடுப்பின் மேல் வைத்த அந்தப் பொருள் வெப்பத்தினால் உருகுவதற்குப் பதிலாக கெட்டியாகியது.
உயர்ந்த வெப்ப நிலையில் அது அடையும் மாற்றத்தையும் கவனித்தார். இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு ஆராய்ச்சியை தொடர்ந்து செய்தார். எரிந்து கொண்டிருக்கும் தீயில் ரப்பர் கலவைபட்டதும் தோலைப்போல் கருகியது. இதனைத் தடுக்க முடியுமா என்று மேலும் ஆராய்ந்தார்.
விடா முயற்சியினால், நீண்ட கால சிந்தனையினால் பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆராய்ந்தார். அவருடைய அருமை மனைவியும் குழந்தைகளும் கஷ்டப்படுவதைக் கண்டு மனம் கலங்கினாலும் தன்னுடைய ஆராய்ச்சியை விடவே இல்லை.
வெற்றி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் தொடர்ந்து பணியைச் செய்து கொண்டிருந்தார். கஷ்டத்தைப் போக்க கடன் வாங்கினார். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டது.
அதனால் சிறையில் சில நாட்கள் மீண்டும் அடைக்கப்பட்டார். இவருடைய ஆராய்ச்சியைக் கண்டு இருவர் பொருள் உதவி செய்ய முன் வந்தனர்.
அந்தப் பணத்தைக் கொண்டு ரப்பர் தொழிற்சாலையை அமைத்தார். அதன் மூலம் பணத் தட்டுப்பாடு நீங்கியது. ரப்பரும் கந்தகமும் கலந்த கெட்டிப் பொருளைப் பலருக்கும் காட்டும் வகையில் கண்காட்சி ஒன்றை அமைத்தார்.
பார்த்தவர்கள் வியந்தனர். பாராட்டுரை வழங்கினர். இவருடைய கண்டுபிடிப்பிற்குப் பொற்பதக்கம் அளிக்கப்பட்டது.
இவருக்கு கிடைத்த உரிமைப் பணம் எல்லாம் சேர்த்தாலும், அவர் பொருட்காட்சிக்காகச் செலவு செய்த பணத்திற்கு ஈடாகவில்லை.
எனவே கடனைத் திருப்பித் தர முடியவில்லை. அதனால் மீண்டும் சிறை செல்ல வேண்டியதாயிற்று. சிறைக்குள் குளிர் காய்வதற்கு வசதி இல்லாத சிறிய அறையில் இருந்தார்.
அவருடைய நண்பர்களின் உதவியால் விடுதலை கிடைத்தது! தன்னுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். பசியோடிருந்தாலும் நோயுற்றிருந்தாலும் அவர் ஓயாது உழைத்தார்.
தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தியாகம் செய்து நேர்மையுடன் நடந்து கொண்டார். கண்டுபிடித்த பொருளைச் சீர்திருத்தி மக்களுக்குப் பயன்படும் முறையில் அமைப்பதில் அவருக்கு மன நிறைவு ஏற்பட்டது.
புதிய கண்டுபிடிப்புகள் குற்றம் குறைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.அவற்றைச் சரியாக அமைக்காவிட்டால் - பணமும் நேரமும் வீணாவதுடன், ஒழுக்கக் கேடும் உண்டாகும் என்று எண்ணினார்.
எனவே தன்னுடைய கண்டு பிடிப்பை மதிப்புடையதாகவும் தகுதியுடையதாகவும் செய்து முடித்தார். மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு அதற்காகவே பாடுபட்டார். கந்தகச் சேர்க்கையைப் பற்றிக் கண்டு பிடிக்க ரப்பரைப் பற்றி மேலும் மேலும் ஆராய்ச்சிகள் நடத்தினார்.
லாபத்தைப் பெருக்கிக் கொள்ளாமல், கிடைத்த பணத்தைச் செலவு செய்து, புதிய பொருள்களைத் தேடி, ஆய்வுகள் நடத்திக் கொண்டே இருந்தார்.
நூற்றுக்கு மேற்பட்ட வகைகளில் ரப்பரைப் பயன்படுத்தலாம் என்று வரிசை வரிசையாகப் பட்டியலில் குறித்து வைத்தார்.
ரப்பர் உற்பத்தித் தொழிலில் கவனம் செலுத்தாமல் ரப்பரைப் பல வகைகளில் பயன்படுத்த முடியும், என்பதனை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதில்தான் அதிக அக்கறை காட்டினார்.
குட் இயர் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டு காலம் கழித்ததையும் கடன் சுமை அதிகமாக இருப்பதையும் கண்டு முழு உரிமையையும் மகனுக்கு அரசாங்கம் தந்தது. ரப்பரை ஆயிரம் வகையில் பயன்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை.
கந்தகம் சேர்ந்த ரப்பரைக் கண்டு பிடித்ததற்காக ரப்பர் சங்கங்கள் எல்லாம் "ரப்பர் தொழிலின் தந்தை" என்று அவரைப் போற்றிப் புகழ்ந்தன. அவருடைய கண்டுபிடிப்புக்கு குட் இயர் என்று பெயர் சூட்டி புகழும் சேர்த்தனர். இன்று இலட்சக்கணக்கான வாகனங்கள் ரப்பரின் உதவியால் மென்மையாக உருண்டு செல்லுவதற்கு அவர் தான் காரணம்!
மக்கள் சமுதாயத்திற்கு ரப்பர் அதிக அளவு பயன்படுவதை அறிந்து உலகம் முழுவதும் அவருடைய பெயரை உச்சரித்த வண்ணம் இருக்கின்றது.
இந்த அளவுக்கு அவர் எப்படி உயர முடிந்தது என்றால், தான் கொண்ட கொள்கையை விடாப் பிடியாகப் பிடித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, தோல்விக்குத் துவளாமல் இன்னல்களுக்கு அயராமல் புதுப் பொருளை உலகிற்கு அளித்ததன் மூலம்தான்!
#Rubber, #Life, #World, #people, #true, #Data, #rubber_tree, #rubber_plant
Comments