"Eight" walking exercise

"Eight" walking exercise

 

health, life, tips, motive

"எட்டு" நடை பயிற்சி

"எட்டு" போடுங்கள் - நோய் எட்ட விடாமல் செய்யுங்கள்.”

எட்டு என்பது ஒரு நம்பர். ஒன்றிலிருந்து பத்து வரை சொல்லும்போது ஏழு என்ற நம்பருக்கு அடுத்ததாக வருவது தான் "எட்டு". இது குழந்தைகள் நாம் கேட்கும் கேள்விக்கு சொல்லும் பதில்.
நாம் இப்பொழுது பார்க்கப்போவது "எட்டு" போடுவதனால் கிடைக்கும் பலன்களை.
இது என்னய்யா பெரிய விஷயம்?
ஒரு பென்சிலை அல்லது பேனாவை எடுத்துக்கொண்டு ஒரு தாளில் இரண்டு வட்டங்கள் அடுத்து அடுத்து போட்டால் அது தான் "எட்டு".
அந்த எட்டு இல்லேப்பா. இது வேற எட்டு. RTO ஆபிசில் two wheeler லைசென்ஸ் வாங்குவதற்கு, நம்மை எட்டு போட சொல்லுவார்கள். ஒரு குறுகிய ரோட்டில் அல்லது ஒரு குறுகிய இடத்தில, வண்டியை ஓட்டிக்கொண்டு மெதுவாக கீழே விழாமல் மற்றும் காலை தரையில் ஊன்றாமல் நன்றாக balance செய்து கொண்டு இடது புறம் வளைத்து வண்டியை திருப்பிக்கொண்டு வந்து, உடனே வலப்புறம் வளைத்து கொண்டு வந்து முடிக்கவேண்டும். சொல்லுவதற்கு எளிதாக தெரிந்தாலும், நன்றாக வண்டி ஓட்ட தெரிந்தவர்களும் சில நேரங்களில் கோட்டை விட்டு விடுவார்கள்.

நாம் இப்பொழுது பார்க்கப்போவது - அதே எட்டு போடுவது தான். ஆனால் வண்டியுடன் அல்ல. "உடல்" என்று சொல்லப்படுகின்ற வண்டியைக்கொண்டு.

இந்த எட்டு போடுவது, சிறிய வயதினருக்கும், நல்ல ஆரோக்கியம் உள்ளவர்க்கும் தேவையில்லாத வேலை. அவர்கள் மேற்கொண்டு இந்த பதிவை படிப்பதை விட்டு விட்டு வேறு வேலை இருந்தால் பார்க்கலாம்; அப்படியானால் யாருக்கு இது தேவையானது?
1) உடல் பருத்து எடை குறைக்க பாடுபடுவர்களுக்கு;
2) ஏதாவது நோயினால் படுக்கையில் படுத்து உடலுக்கு சிறிது தெம்பை கொண்டு வரவேண்டும் என்பவர்களுக்கு;
3) தெருவில் நடை பயில கூச்சப்படுபவர்களுக்கு;
4) காரில் இருந்து இறங்க மறுப்பவர்களுக்கு ;
5) “எனக்கு சகல வசதிகளும் இருப்பதால் எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை” என்று சொல்லிக் கொண்டு ஆரோக்யத்திற்காக அலைபாய்பவர்களுக்கு;
6) இன்ன பிற நபர்களுக்கு.
ஆக யார் வேண்டுமானாலும் எட்டு போடலாம்.
இதன் பலன்கள் - சொல்லி முடியாது. நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்தது. வயலுக்கும் வரப்புக்கும் நடந்து நடந்து பல மைல் தூரம் சென்று வந்தவர்கள் "எட்டு" போடுவதால் பிரத்யேகமாக பல பலன்கள் கிடைக்கும் என்று கருதியே இதை செய்ய சொல்லி வந்தார்கள்.

சென்னை நங்கநல்லூர் பார்க்கில் மற்றும் பல இடங்களில் பார்க்கலாம். வரிசையாக உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் எட்டு போடுவதை.
சரி; இப்பொழுது நாம் விசயத்திற்கு வருவோம்.
எட்டு என்பது இரண்டு அடுத்து அடுத்து உள்ள இரண்டு வட்டங்கள். இரண்டு வட்டங்களும் ஒரே மாதிரியான அளவுகள் உள்ளவை. வட்டத்தில் ஆரம் சரியாக நான்கு அடிகள். (Four Feet). எந்தவிதமான கஷடமும் இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். Apartments மொட்டை மாடி மிகவும் நல்லது. அல்லது வீட்டின் முன்புறம் இடத்தை தேர்வு செய்யலாம். குறைந்தது 24 அடி நீளம் - பன்னிரண்டு அடி அகலம் உள்ள நீள் செவ்வக இடமாயிருக்கவேண்டும். வடக்கு தெற்காக இரண்டு வட்டங்கள் இருக்க வேண்டும். அதாவது நமக்கு தேவையான இடம்: வடக்கு தெற்காக 24 அடி - கிழக்கு மேற்காக 12 அடி. இப்போது ஒரு மைய புள்ளியை தேர்வு செய்யுங்கள். அந்த மைய புள்ளியில் இருந்து, வடக்கு திசையில் 4 அடி தள்ளி ஒரு புள்ளி வைக்கவும். இது வடக்கு வட்டத்தின் மையம். இதே போல் தேர்வு செய்யப்பட்ட மையப்புள்ளியிலிருந்து தெற்கு திசையில் 4 அடி தள்ளி ஒரு புள்ளி வைக்கவும். இது தெற்கு வட்டத்தின் மையப்புள்ளி. இப்பொழுது வடக்கு வட்டத்தின் மையத்தை அடிப்படையாக கொண்டு, 4 அடி ஆரத்தில் ஒரு வட்டம் வரையுங்கள். அதேபோல் தெற்கு வட்டத்தின் மையத்தை அடிப்படையாக கொண்டு, 4 அடி ஆரத்தில் ஒரு வட்டம் வரையுங்கள். இப்பொழுது இரண்டு வட்டங்களை உருவாக்கி விட்டீர்கள். இப்பொழுது அளந்தீர்கள் என்றால், வடக்கு தெற்காக 16 அடி இருக்கும்; கிழக்கு மேற்காக 8 அடி இருக்கும். இது தான் விதிக்கப்பட்ட முறை. இடம் குறைவாக இருப்பதன் காரணமாக அளவு குறைவாக வட்டங்கள் வரையலாம். சொல்லப்பட்ட அளவு இருக்கும் பட்சத்தில், எதிர்பார்க்கும் பயன்கள் கிடைக்கும். குறைந்த வட்டத்தில் உடலை நன்றாக வளைத்து திருப்ப முடியாது. பெரிய வட்டத்தில், சுலபமாக உடலை வளைத்து திருப்பலாம். அளவு கூடினாலும், அல்லது குறைந்தாலும், எதிர்பார்க்கும் பலன்கள் கிடைப்பதில்லை.
வட்டங்கள் ready யாகி விட்டன.
இப்பொழுது தெற்கு வட்டத்தின் முனைப்பகுதியிலிருந்து ஆரம்பியுங்கள். அருகிலுள்ள தெற்கு வட்டத்தை இடது புறமாக சுற்றி வரவும். அரை வட்டம் முடிந்தவுடன், வடக்கு வட்டத்தை வலப்புறமாக சுற்றி வரவும். பின் இடது வட்டத்தின் இடது புறம். இப்படியாக, குறைந்த பட்சம் 21 தடவை இரண்டு வட்டங்களையும் முழுதாக மாற்றி மாற்றி சுற்றி வர வேண்டும். துடங்கிய இடத்தில பயிற்சியை முடிக்கவும்.
இந்த எட்டு பயிற்சியை எட்டி எட்டி செய்ய கூடாது. அதாவது வேக வேகமாக செய்ய கூடாது. அனுபவித்து ஒவ்வொரு step ஆக செய்ய வேண்டும். கோவில்களில் நிறைய பெண்கள் கோவில் பிரகாரத்தில் அடிமேல் அடிவைத்து ஒரு பிரார்த்தனைக்காக நடந்து வருவார்கள். அது போலத்தான். அப்படி செய்தால் தான் அதன் முழுப்பலனும் கிடைக்கும்.
- பத்தாவது சுற்று முடியும் போது, மூச்சு வாங்க ஆரம்பிக்கும். அதாவது, உங்கள் நுரையீரல், காற்றை அதிகம் சுவாசிக்க துடங்கும். அதிகம் காற்று உள்ளே செல்லும்போது, oxygen அளவு கூட ஆரம்பிக்கும். oxygen கூட கூட, உடலிலுள்ள செல்கள் சுறு சுறுப்பாக தொடங்கும். பழைய செல்கள் அழிந்து, உயிரோட்டமுள்ள செல்கள் வளர ஆரம்பிக்கும்.
- இடது புறம் வயிறு மற்றும் இடுப்பில் உள்ள தொங்கு சதைகள் குறைய தொடங்கும். அதே போல வலது புறம் உள்ள தொங்கு சதைகள் குறைய தொடங்கும். நாளடைவில் உடல் ஒரு நேர் கோடு (பனை மரம்) போல மாற ஆரம்பிக்கும்.
- மூச்சு வேறு வழியில்லாமல் அதிகம் உள்ளேயும் வெளியும் செல்வதால், பிராண சக்தி வலுவடையும். அதாவது உயிர் சக்தி வலுவடையும். இதன் காரணமாக உள்ளுறுப்புகளில் தோன்றக்கூடிய பிரச்சினைகள் மறைய தோன்றும்.
- நீரிழிவு நோய் கட்டுக்குள் வர தொடங்கும்.
- குடல் இறக்க பிரச்சினை தீர்வடையும்.
- இடமும் வலமும் வளைந்து வளைந்து செல்வதால், உடல் சமநிலை கட்டுக்குள் வரும்.
- கண் பார்வை தீர்க்கமடையும்.
-மொத்தத்தில் ஒரே பயிற்சியில் - ஒன்பதாயிரம் பலன்கள்.
ஆனால் ஒரு condition. 21 சுற்று முடித்து விட்டு, ஒண்ணையும் காணோமே என்று நினைத்து விடக்கூடாது.
குறைந்தது ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) செய்ய வேண்டும். அதாவது காலை ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை. தெம்பு உள்ளவர்கள் 21 சுற்றுக்கு மேலும் சுற்றலாம். ஆனால் அதிகம் வேண்டாம்.
48 நாட்கள் கழிந்த பின்னர் நீங்களே உணர்வீர்கள்.
1) மூட்டு வலி குறைந்து விட்டது;
2) மலச்சிக்கல் காணாமல் போய் விட்டது;
3) நல்ல பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.
4) உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விட்டன.
5) இப்படியாக பல பல ஆரோக்கியமான பலன்கள்.
6) கன்னியாகுமரியை சார்ந்தவர்கள் காஷ்மீர் வரை சென்று வருவதற்கான சக்தி வந்து விட்டது என்று உணர்வார்கள்.
உடல் நலன் பேணுங்கள். நம்மை படைத்தவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷம்- நமது உடல். ஆரோக்கியமாக இருப்பது நமது கடமை. .
"உடல் வளர்த்தல் உயிர் வளர்த்தலேயாகும்" – திருமூலர்

#Health,#Life,#Tips, #motive,

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send