Old is gold
தொலைந்து போன மனிதர்கள்
நம் வாழ்வில் கலந்திருந்த பல மனிதர்களை காணவில்லை.
நாகரீக வளர்ச்சியில் அவர்களை நாம் தொலைத்துவிட்டோம்.
ஒரு காலத்தில் சைக்கிளில் பெட்டி நிறைய குச்சி ஐஸ், சேமியா ஐஸ், பால் ஐஸ், கப் ஐஸ் என்று கூவி கூவி விற்ற தாத்தாக்களை இன்று காணவில்லை.
பெரிய பெரிய ஐஸ்கிரீம் கடைகளின் ஃபிரிட்ஜில் அவர்கள் புதைக்கப்பட்டனர்.
தலையில் காய்கறி கூடையுடன் நம் வீட்டிற்கே வந்து சுத்தமான காய்கறிகளை தந்த அக்காக்களை காணவில்லை.
சூப்பர் மார்க்கெட்டுகளில், வண்ண வண்ண விளக்கிற்கு கீழே அடுக்கி வைத்திருக்கும் காய்கறிகளில் அவர்கள் நசுக்கப்பட்டனர்.
பொம்மையோடு கூடிய சவ்வு மிட்டாய் கம்புடன் வந்து, மீசையே அரும்பாத நமக்கு மீசை வரைந்து, நேரம் பார்க்க தெரியாத நமக்கு வாட்ச் கட்டி விட்ட அன்பு மாமாக்களை காணவில்லை.
இன்று டெய்ரி மில்க், கின்டர் ஜாய் என்று குழந்தைகள் சாப்பிடும் மாடர்ன் சாக்லேட்டுகளின் பாக்கெட்டுகளில் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கலாம்.
கையில் சினிமா பெட்டியோடு வந்து, பாரு பாரு நல்லா பாரு, பயாஸ்கோப்பு படத்த பாரு என்று பாடியபடி நமக்கு ஃபிலிம் ரோலில் எம்ஜிஆர், சிவாஜி ரஜினி, கமல் என அஞ்சு பைசா, பத்து பைசாவுக்கு சினிமா காட்டிய அண்ணன்களை காணவில்லை.
இன்றைய மாடர்ன் சினிமா தியேட்டர்களின் இருளில் அவர்கள் கலந்திருக்கலாம்.
சைக்கிளில் உப்பு விற்ற தாத்தா,
தள்ளு வண்டியில் கோலப்பொடி விற்ற அண்ணன்,
பள்ளிக்கூட வாசலில் மாங்காய் விற்ற பாட்டி தாத்தா என பலரையும் இன்று காணவில்லை.
ஓரு வருஷத்துக்கு முன்னாடி மதுர பக்கத்துல இருக்குற ஆத்திபட்டி போயிருந்தேன்.
அங்க ஒரு பள்ளிக்கூட வாசல்ல ஒரு பாட்டி, மாங்காய், வெள்ளரிக்காய், கடலை மிட்டாய் எல்லாம் வச்சு வித்துட்டு இருந்தாங்க.
நான் அவங்ககிட்ட ஒரு பத்து ரூபாய்க்கு வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிட்டுட்டே அவங்ககிட்ட பேசுனேன்...
ஏன் பாட்டி இந்த வயசுல இப்படி கஷ்டப்படுறீங்க? இப்ப உள்ள புள்ளைங்கலாம் இதெல்லாம் வாங்கி சாப்பிடுறாங்களானு கேட்டேன்.
அதுக்கு அந்த பாட்டி சொன்னாங்க, கண்ணு இந்த பள்ளிக்கூடத்துல காலையிலையும், சாயங்காலமும் மட்டும்தான் ஸ்கூல் புள்ளைங்கல பாக்க முடியும். ரெண்டு நேரமும் சேர்த்து ஒரு 100 ரூபா, 150 ரூபா வியாபாரம் ஆகும். மத்தபடி உங்களை மாதிரி யாராவது வாங்குனாதான் உண்டு. இந்த காசு, ரேசன்ல சீனி, எண்ணெய், மண்ணெண்ணெய் வாங்குறதுக்கும் போதும். இதத வச்சுதான் பொழப்பு ஓடுது. இந்த வயசுல வேற என்ன கண்ணு பண்ண முடியும்னு விரக்தியா சொன்னாங்க.
அவங்ககிட்ட , கூட ஒரு பத்து ரூபாய்க்கு வெள்ளரிக்காய் வாங்கி சாப்பிட்டு வந்தேன். நான் மறுபடியும் வாங்குன சந்தோசத்துல இன்னும் ரெண்டு வெள்ளரிப் பிஞ்சு சேர்த்து தந்தாங்க.
ஒருதடவை ஒரு சூப்பர் மார்க்கெட்ல நான் திராட்சை பழத்த எடுத்து சாப்பிட்டப்ப, அங்க இருந்த ஒரு மேனேஜர் என்னைய எல்லார் முன்னாடியும், திராட்சைய எடுத்து சாப்பிடாதீங்கன்னு சொல்லி அசிங்கப்படுத்துனது ஞாபகம் வந்துச்சு.
நாம் தொலைத்தது சில மனிதர்களை மட்டுமல்ல, அவர்களின் கலப்படமற்ற அன்பையும்தான்..!
Comments