Motivation

Motivation

#life, #true, #btq, #trust
 *Motivation*

*சாதனைகள் சாத்தியமே!*


தான் படைத்த ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு சாதனையயாவது கடவுள் எதிர்பார்க்கிறார் - இது சுதங்கமா முனிவர் கருத்து.


சாதனைதான் ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டும். மற்றவர்களை விட உயர்த்தி காட்டும்  சரித்திரத்தில் இடம்பெற வைக்கும் .காந்தியை, ஆபிரகாம் லிங்கனை, ஷேக்ஸ்பியரை, பெர்னாட்ஷாவை, தாமஸ் ஆல்வா எடிசனை நினைவில் பதித்து வைத்திருக்கும் நாம் அவர்களின் பெற்றோர்களின் அல்லது பிள்ளைகளின் பெயரையாவது தெரிந்து வைத்திருக்கிறோமா! என்றாள் இல்லை என்ற பதில் தான் நமக்குள் எழுகிறது.


பெயரினால், படிப்பினால், பதவியினால், பரம்பரையினால் அடையாளம் காட்டப்படுபவர்கள் சாதாரண மனிதர்கள். அதுவும் அவர்கள் இருக்கும் வரை தான். செய்த அருஞ்செயல்களால் அடையாளம் காட்டப்படுபவர்கள் தான் காலம் கடந்தாலும் நம் கருத்தில் நிலைத்தவர்கள்.அவர்கள் தான் சாதனை மனிதர்கள். தனக்கிருக்கும் திறமைகளை எல்லாம் முழுமையாக வெளிப்படுத்தி அனைவரும் மெச்சும் படியான, தன் பெயர் விளங்கும்படியாக செய்வதுதான் சாதனை.


மாபெரும் வீரர் என்றால் கத்தி தூக்கி சண்டையிடுபவர் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது .கொண்ட குறிக்கோளை வெற்றிகரமாக முடித்துக் காட்டியவர் எல்லாருமே மாபெரும் வீரர்தான். நழுவுகின்ற வேட்டியை இழுத்து பிடித்தவர் மட்டும் மானம் காத்தோர் அல்ல. குடும்ப கவுரவமும், தேச கவுரவமும், கொஞ்சமும் குறையாதபடி, பெருமையோடும் புகழோடும் வாழ்ந்தவர் அனைவருமே மானம் காத்தோர் தான்.


வெல்வதற்காக இந்தப் பிறவி .நம் பெயரை நமக்குப் பின்னாலும் உலகம் சொல்வதற்காக இந்த பிறவி. நல்லதோர் வீணையாக நாம் பிறந்திருக்கும் போது, நலம் கெட அதை புழுதியிலா எறிவது?


வெளிச்சம் கண்டால் விழித்து, எழுந்து, உண்டு, களித்து ,ஓடியாடித் திரிந்து, இருளைக் கண்டால் உறங்கப் போவது விலங்கு வாழ்க்கை. ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் மகத்தான ஆற்றல்களை ஒன்று சேர்த்து நல்ல விஷயம் ஏதாவது ஒன்றையாவது சாதித்தே தீருவது என்று இன்றாவது ஒரு சங்கல்பம் எடுத்துக்கொண்டு இந்த மானிட வாழ்க்கையின் மகத்துவத்தை உலகறிய செய்வோம்.


நமக்காக நம் முன்னோர்கள் என்னென்னவோ செய்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். எத்தனையோ விஞ்ஞானிகள் எத்தனையோ சாதனங்களைக் கண்டுபிடித்து தந்திருக்கிறார்கள். ஆனால் நாமும் பின்னால் வருபவர்களுக்கு முன்னோர்கள் தானே! நம்மைப் பற்றி நமக்கு பின்னால் வருபவர்கள் பெருமையாக சொல்லிக் கொள்ள நாம் ஏதாவது ஒன்றை சாதிக்க இன்றே முற்படுவோம்.


எவரும் எளிதாக செய்யக் கூடியது எதுவுமே சாதனை அல்ல .ஆற்றின் ஓட்டத்திற்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவது சாதனை. புவியீர்ப்பு சக்திக்கு எதிராக உயரப்போவது சாதனை. ஒரு பெரிய இரும்பு ஆலையை டாட்டாவின் பேரனோ, பிர்லாவின் பேரனோ தொடங்கினால் அது சாதனை அல்ல. சாதாரண மனிதன் தொடங்கினால்தான் சாதனை. உங்கள் சக்திக்கு உட்பட்டதாகவும் அதேசமயம் உங்களுடைய அறிவு ஆற்றல் திறமை சக்தி அத்தனைக்கும் சவால் விடுவதாகவும் சாதனை இருக்க வேண்டும்


இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டால் மனிதன் ஒரு அணு தான் ஆனால் அணுவின் வலிமை அளவிட முடியாதது உங்கள் வலிமையும் அளவிட முடியாதது என்பதை இன்றாவது உணருங்கள்.

#life, #true, #btq, #trust

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send