sorry

sorry

#life, #true, #sorry, #wrong, #update, #list, #data

தவறு செய்வது தவறில்லை ஆனால்..!_

தவறு செய்யாதவன் மனிதனே இல்லை. தவறு செய்வது மனித இயல்புகளில் ஒன்று. எந்த ஒரு மனிதனும் வாழ்வில் தவறே செய்யாமல் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.


தவறுகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தெரிந்தே செய்யும் தவறு. இரண்டு தெரியாமல் செய்யும் தவறு. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குறை கூறுகிறீர்கள். இது தெரிந்தே செய்யும் தவறு. நீங்கள் உங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வருவபர் மீது எதிர்பாராதவிதமாக மோதி விடுகிறீர்கள். இது தெரியாமல் செய்த தவறு.


தவறு செய்வது தவறில்லை. ஆனால் நாம் செய்தது தவறு என்று மனதால் உணர்ந்த உடனேயே சம்பந்தப் பட்டவரிடம் அதற்காக வருத்தம் தெரிவித்து விட வேண்டும். இதற்குப் பிறகு அந்த தவறை வாழ்நாள் முழுவதும் செய்யவே கூடாது. ஒரு தவறை செய்து விட்டு செய்தது தவறு என்று உணர்ந்த பின்னரும் நான் செய்தது தவறில்லை என்று செய்த தவறை நியாயப்படுத்துவது தவறுகளிலேயே பெரும் தவறாகும்.


அலுவலகங்களில் பணியாற்றும் போது பணி தொடர்பாக பல தவறுகள் ஏற்படும். அதை உயர் பொறுப்பில் உள்ளவர்கள் சுட்டிக் காட்டும்போது அதை மனப்பூர்வமாக ஏற்று அந்த தவறு எப்படி நடந்தது ஏன் நடந்தது என்பதையும் அதை எப்படி சரி செய்வது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.


சிலர் சிறு சிறு தவறுகளை செய்து கொண்டே இருப்பார்கள். உடனே சம்பந்தப்பட்டவரிடம் சாரி என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு சுலபமாக தப்பித்து விடுவார்கள். ஆனால் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு சாரி என்ற வார்த்தை அவர்களை காப்பாற்றிக் கொண்டே இருக்கும். எதற்கெடுத்தாலும் சாரி சொல்லி தப்பித்துக் கொள்ளுவதும் ஒருவகை தவறுதான்.


புவியீர்ப்பு விசைத் தத்துவத்தை இந்த உலகத்திற்குத் தந்த சர்.ஐசக் நியூட்டன் மற்றொரு தத்துவத்தையும் நமக்கு உணர்த்திச் சென்றிருக்கிறார். நமது தவறுகளுக்கும் அதன் பின்விளைவுகளுக்கும் நாமே காரணம் என்பதே அந்த தத்துவமாகும். ஐசக் நியூட்டன் தனது கண்டு பிடிப்புகளை எல்லாம் அவ்வப்போது காகிதங்களில் எழுதி பதிவு செய்து வந்தார். நியூட்டன் செல்லப்பிராணிகளின் மிது அதிக அன்புடையவர். தனது வீட்டில் பூனை, நாய் போன்ற பிராணிகளை வளர்த்து வந்தார்.



ஒருநாள் தனது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளையெல்லாம் மேஜை மீது வைத்துவிட்டு வெளியே புறப்பட்டுச் சென்றார். அவர் வளர்த்து வந்த ஒரு நாயானது மேஜை மீது ஏறி விளையாடியது. அப்போது மேஜை மீது எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியினை தட்டிவிட்டது. நியூட்டனின் அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளெல்லாம் எரிந்து நாசமானது. நியூட்டன் அறைக்குத் திரும்பியதும் அவருடைய நாய் ஆசையாக வாலாட்டிக் கொண்டே அவரை நோக்கி ஓடிவந்தது. தனது ஆராய்ச்சிக் குறிப்புகள் எரிந்து சாம்பலானதைக் கண்டும் நியூட்டன் நாயின் மீது கோபப்படாமல் அதைத் தடவிக் கொடுத்தார்.


வெளியே சென்றபோது மெகுழுவர்த்தியை அணைத்துச் சென்றிருக்கலாம். அல்லது ஆராய்ச்சிக் குறிப்புகளை பத்திரப்படுத்தி வைத்துச் சென்றிருக்கலாம். இரண்டையும் செய்யாதது தன்னுடைய தவறுதானே தவிர இதில் நாயின் தவறு ஏதுமில்லை என்று அவர் நினைத்ததே நாயின் மீது கோபப்படாதற்குக் காரணமாகும். தான் செய்த தவறுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு அடுத்தவரை தண்டிக்காமல் அதற்கு தானே முழுபொறுப்பையும் ஏற்றுக் கொள்வது உயர்ந்த குணமாகும்.



செய்த தவறை ஒப்புக்கொள்ளுவது என்பது ஒரு உயர்ந்த பண்பாகும். அப்படி ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மற்றொரு உயர்ந்த பண்பாகும்.


நண்பர்களே. செய்வது தவறு என்று தெரிந்தால் எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் அந்த செயலைச் செய்யாதீர்கள். தெரிந்தே ஒரு தவறைச் செய்யாதீர்கள். தெரியாமல் எதிர்பாராதவிதமாக ஒரு தவறைச் செய்துவிட்டால் அதற்காக வருந்தி அதன் பிறகு அந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.


#life, #true, #sorry, #wrong, #update, #list, #data

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send