School
அன்றும் இன்றும் பள்ளிக்கூடம்:
#அன்று...
அந்தக் காலத்தில் நாங்கள் பள்ளிக்கூடம் போன கதைகள் இன்றைய தலைமுறைக்கு கேட்க வேடிக்கையாக இருக்கும்.
ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறக்கிறது என்றாலே வீடு பரபரப்பாகி விடும் . அந்த காலத்தில் நோட்டு புத்தகங்கள் பள்ளியில் கொடுத்ததாக நினைவில்லை. ஒரு பெரிய லிஸ்டே போர்டில் எழுதி போடுவார்கள். அதை ஒரு நோட்டில் காப்பி பண்ணிக் கொண்டு, வெளியே எங்கே விலை குறைவாக இருக்கும் என்று பார்த்து வாங்குவோம். பேனா, பென்சில் சமாச்சாரமெல்லாம் போன வருஷத்து மிச்சங்களை கணக்கெடுத்து அதில் ஓய்ந்து போனது மட்டுமே, அந்த வருடம் புதிதாக கிடைக்கும்.பென்சில் பாக்ஸ் அனேகமாக பழைய ஜாமென்ட்ரி பாக்ஸ் தான் . அதுவும் ஸ்கெட்ச் பென்சில் எல்லாம் பத்தாங்கிளாஸ் பன்னிரெண்டாம் கிளாஸ் பிள்ளைகளுக்கு மட்டுமே... மற்ற எல்லோருமே கலர் பென்சில் தான் மேப் முதல் எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவோம்.
பிரில் இங்க்( ஊதா கலரில்) தான் அனேகமாக வாங்குவோம். ஏனென்றால் அந்த கம்பெனியில் லேபிலும் இலவசமாக கொடுப்பார்கள் . ஆனால் எந்தவித டிசைனும் இல்லாமல் பிரில் என்ற எழுத்துடன் இருக்கும். அந்தப் லேபிலை பசை தடவி ஒட்டுவோம். அதுவும் பத்தவில்லை என்றால் ரஃப் நோட்டுகளுக்கெல்லாம் வெள்ளை தாளை டிசைன் டிசைனாக வெட்டி ஒட்டி கொள்வோம். ஆசிரியர்கள் அனேகமாக பிரவுன் பேப்பரில் தான் நோட்டுக்கு கவர் போடவேண்டும் என்று சொல்லுவார்கள்.
பிரவுன் பேப்பர் வாங்கி ரெக்கார்டு நோட்டு, கிராப் நோட்டு, போன்ற முக்கியமான நோட்டுகளுக்கு பிரவுன் பேப்பரில் போட்டு விட்டு அனேகமாக கேலண்டர் தாள்தான் அட்டை போட பயன்படும். புத்தகங்களை யெல்லாம் பைண்ட் பண்ணக் கொடுப்போம். அப்போதுதான் அது ஒரு வருடம் தாங்கும். மேலும் அடுத்த வருடம் அரை விலைக்கு அதை விற்று விடவும் சௌரியமாக இருக்கும்.
பைண்ட் பண்ண கொடுக்கும்போதே "அண்ணே ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு விதமான டிசைன்களை ஓட்டுங்கள்" என்று ஞாபகமாக சொல்லி விட்டு வருவோம். அது பையிலிருந்து புத்தகம் எடுக்க நல்ல ஒரு அடையாளமாக இருக்கும்
அதிகம் பயன்படுத்தாத சில புத்தகங்கள், துணைப்பாட நூல், கோனார் தமிழ் உரை, ஆகியவற்றை முந்தைய பேட்ச் மாணவர்களிடமிருந்து , அரை விலைக்கு வாங்கிக் கொள்வோம். முந்தைய வருடங்களில் உபயோகப்படுத்திய நோட்டுகளில் உள்ள( காலி) எழுதாத பேப்பர்களை எல்லாம் கிழித்து அதை பெரிய கோணி ஊசி வைத்து தைத்து ரஃப் நோட்டாக வைத்துக் கொள்வோம்.எதையும் வீணாக்கக் கூடாது அதை முழுதாக உபயோகிக்க வேண்டும் என்பது அந்த காலகட்டத்தில் அழுத்தமான ஒரு கருத்தாக இருந்தது.
புத்தகப் பையை இப்போது உள்ளது போல் பலவிதங்களில் அழகாக எல்லாம் கிடைக்காது. என்னுடைய சிறுவயதில் நான் இரண்டாவது, மூன்றாவது படிக்கும்போது அலுமினியம் பெட்டி உபயோகத்தில் இருந்தது. பணக்கார வீட்டுக் குழந்தைகள் அலுமினியம் பெட்டியில் புத்தகத்தை அடுக்கிக் கொண்டு வருவார்கள் .தோளில் போடும்படி நீண்ட வார் வைத்த துணிப்பையில் புத்தகங்களை அடுக்கி கொண்டு போவோம்.
கலர் பூசிய அலுமினியம் டப்பாக்கள் தான் மதிய சாப்பாடு கொண்டு போக படுத்துவோம். அலுமினியம் டப்பாவில் விதவிதமான கலர்களை அறிமுகப்படுத்தியதே பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக.
அதுபோல யூனிபார்ம் ஒரு வருஷம் விட்டு ஒரு வருடம் எடுக்கும் ஒரு விஷயமாகவே இருந்தது. புதிதாக எடுக்கும் போது பழைய பாவாடைக்கு ஒரு அதே கலரில் ஒரு நீள துணியை வாங்கி பாவாடையின் கீழ் ஓரத்தில் பட்டி போல கொடுத்து தைத்து வைத்துக் விடுவார்கள். மழைக் காலங்களில் யூனிபார்ம் உலராத போது அது கை கொடுக்கும். பிள்ளை வளர்ந்து விட்டாள் என்று ஓட்டு போட்ட பாவாடையை தலையில் கட்டிவிடுவார்கள் .சில சமயங்களில் தீபாவளி பொங்கலுக்கு கூட அதே சாயலில் அதே கலரில் பாவாடை எடுப்பது உண்டு சமயத்தில் யூனிபார்மாக அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நினைப்பில் ...
நன்றாக கழுவப்பட்ட சர்பத், ஜூஸ் பாட்டிலில் தான் தண்ணீர் கொண்டு போவோம்.
பள்ளி இறுதித் தேர்வின் முடிவுகளை கரும்பலகையில் எழுதிப் போடுவார்கள்ள் காலம் செல்லச் செல்ல ,அது போஸ்ட் கார்டாக மாறியது .போஸ்ட் கார்டு வந்ததும் என்னதான் பாஸ் பண்ணி விடுவோம் என்று தெரிந்தாலும், உடனே ஓடிப் போய் சாக்லேட் வாங்கிட்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து கொண்டாடுவோம்.
#இன்று...
இப்போதும் ஜூன் பிறந்தால் வீடுகளில் பரபரப்பு கூடிய கூடிவிடுகிறது.. பீஸ் கட்டுவது அனேகமாக ஆன்லைனிலேயே முடிந்துவிடுகிறது.
பள்ளிக்கூட பேக்.. சாப்பாடு கொண்டு போகும் டிபன் பாக்ஸ்.. தண்ணீர் பாட்டில்.. ஸ்டேஷனரி ஐட்டம்ஸ்.. கடைகள் எல்லாம் அனேகமாக திருவிழாக் கூட்டம் தான். இப்போது உள்ள பிள்ளைகள் சென்ற வருடம் கொண்டு சென்ற எதையும் புதுவருடத்தில் பயன்படுத்துவதில்லை ..பெற்றோரும் நாம் அந்த காலத்தில் அனுபவிக்காததை பிள்ளைகளாவது அனுபவிக்கட்டும் என்ற எண்ணத்தில் புதிதாக வாங்கிக் கொடுக்கிறார்கள்.
புத்தகம் நோட்டுகள் எல்லாமே பள்ளி உபயத்தில் பள்ளிக்கூடத்திலேயே வாங்கி விடுகிறார்கள். அதேபோல பழைய புத்தகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
சீருடையும் அநேக பள்ளிகள் அவர்களே மூன்று அளவுகளில் ஒவ்வொரு கிளாஸ்க்கும் ரெடி பண்ணி விடுகிறார்கள். அதிலேயே பிள்ளைகள் வாங்கிக் கொள்கிறார்கள். சற்று விலை அதிகம் தான். டெய்லர் கடையில் கூட்டம் யூனிபார்ம் தைப்பதற்கு மிகவும் குறைந்து விட்டது .
என் மனதை உறுத்தும் ஒரே விஷயம் இந்நாளைய போல டியூஷன்கள் அக்காலத்தில் கிடையாது. பாடத்தில் சந்தேகம் எழும் பட்சத்தில் வீட்டில் மூத்தவர்களையோ அல்லது தனக்கு முன் செட் பிள்ளைகளையோ ..கேட்டு தெரிந்து கொள்வார்கள். சில சமயம் வகுப்பு ஆசிரியர் பள்ளி முடித்ததும், தனியாக அந்த பகுதியை விளக்கி சொல்லி கொடுப்பார். இதனால் பிள்ளைகளுக்கு படிக்கவும் விளையாடவும் நேரம் இருந்தது. இப்போதுள்ள பிள்ளைகள் நேரமின்றி தவிக்கிறார்கள்.
அதுபோல போக்குவரத்தும்... பிள்ளைகள் நடந்து செல்லக்கூடிய தூரத்தில்தான் வீடு பார்த்து பள்ளிக்கு அருகிலேயே இருப்பார்கள். இப்போது போல வாகனங்களில் பிள்ளைகள் வருவது வெகுவாக குறைவு . அக்காலத்தில் ஒரே ஒரு ஸ்கூல் பஸ் மட்டுமே தூரத்திலுள்ள பிள்ளைகளை அழைத்து வரும் . இதனால் பிள்ளைகள் பாதுகாப்பு வெகுவாக உறுதியான ஒரு விஷயமாக இருந்தது தற்போது அது ஒரு கேள்விக்குறியே ..
இக்காலத்துப் பிள்ளைகள் பல வசதிகளையயும், சௌகரியங்களையும் அனுபவித்தாலும் அந்த காலத்தில் நாங்கள் பள்ளிக்கூடத்திலேயே விளையாடி விட்டு சந்தோஷமாக வீடு திரும்புவோம். முகத்தில் இருந்த அந்த சந்தோஷம் இக்கால பிள்ளைகளிடம் மிஸ்ஸிங்..
Comments