Life

Life

 

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?


கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அமர்ந்து இதமாக அவன் நெற்றியில் தடவும்போதே தலைவலி பறத்துவிடுகிறது. அவளுடைய விரல்களின் மென்மையான ஸ்பரிசம் அவனுக்கு சுகமாக இருக்கிறது.


மனைவிக்கு ஒருநாள் முடியவில்லை. அவள் குளிப்பதற்காக கணவன் வெந்நீர் போட்டு, அதைக் கொண்டுபோய் குளியலறையில் இறக்கி வைக்கிறான். இந்தப் பேரானந்தத்தில் மனைவிக்கு உடற்சோர்வெல்லாம் பட்டென்று நீங்கிவிடுகிறது.


ஒருவர் மீது ஒருவர் காட்டுகின்ற பரிவு; ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்ற ஆத்மார்த்தம்; இணைபிரியாமல் கைகோர்த்து நடக்கின்ற இன்பம்...கணவன் மனைவியைத் தவிர வேறு யாருக்கு இவை வாய்த்துவிட முடியும்!


வாழ்க்கை எத்தனை அழகானது என்பதைக் குடும்பம்தான் நமக்குக் காட்டுகிறது. இல்லறம் எத்தனை இன்பமானது என்பதைத் தாம்பத்தியம் நமக்கு உணர்த்துகிறது.

முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும். ஏனெனில், ரசனைதான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது.


கணவனின் விருப்பமறிந்து ஆசை ஆசையாய் மோர்க்குழம்பு சமைக்கிறாள் மனைவி. கணவன் வீட்டிற்கு வந்ததும் ஆவலாய் உணவு பரிமாறுகிறாள். அவன் ரசித்து ரசித்துச் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்திக்கிறாள்.


இன்று சமையல் நல்ல இருக்கு என்று கணவன் பாராட்டுகிறேன்...

மனைவி சந்தோஷப்படுகிறாள்.

குடும்ப வாழ்வில் ஒருவரை ஒருவர் பாராட்டும் போது, வாழ்க்கை தித்திப்பாகும். மனைவியின் சிக்கனம், உடை உடுத்தும் நேர்த்தி, பரிமாறும் அருமை - இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. மனசார பாராட்டலாமே!


கணவனின் பொறுப்புணர்வு, உழைப்பு, அன்பளிப்பு, செய்யும் சிறு சிறு உதவிகள்...இப்படி பல. மனைவியும் அவ்வப்போது பாராட்டி மகிழ்விக்கலாமே!

குடும்பத்தின் மகிழ்ச்சி நம் கையில்தான் இருக்கிறது. இந்த உண்மையைச் சிலர் உணர்வதே இல்லை. அற்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு வீட்டையே சிலர் போர்க்களமாக்கிவிடுவார்கள்.


அப்படியே நாளும் பொழுதும் போராடிக் கொண்டிருப்பதில் என்ன மகிழ்ச்சி. தேவையற்ற வாக்குவாதங்களும், விட்டுக்கொடுக்காத பிடிவாதங்களும் வீட்டை நரகமாக்கிவிடும். அன்பான வார்த்தைகளே இல்லத்தை சொர்க்கமாக்கும்.


கனிவாகப் பேசும் கணவன் மனைவி இடையே சண்டைகள் வருவதில்லை. அவர்களின் வார்த்தைகள் ஒருபோதும் காயப்படுத்துவதில்லை. ஒருவரை ஒருவர் மதிக்கின்ற குடும்பத்தில்தான் சமத்துவம் இருக்கும்; சந்தோஷம் பெருகும். அப்படிப்பட்ட குடும்பங்களில் பிறக்கின்ற பிள்ளைகள் நல்ல பண்புகளுடன் வளர்வார்கள்.


எனவே கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி; இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். வெளியிடங்களில் மற்றும் அலுவலகத்தில் எல்லாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசிவிட்டு, வீட்டிற்குள் நுழையும் போது முகத்தில் இறுக்கத்தையும் பேச்சில் கடுகடுப்பையும் காட்டாதீர்கள். அது உங்கள் வாழ்விற்கு நீங்களே செய்கின்ற துரோகம்.


குடும்பம் என்றால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அப்போது பதற்றம் அடைய வேண்டாம். இருவரும் அமர்ந்து நிதானமாகப் பேசுங்கள். பிரச்சினைகள் காணாமல் போய்விடும்.

அதை விட்டு விட்டு, மூன்றாம் நபரிடம் உங்கள் வீட்டுப் பிரச்சினைகளைப் பேசாதீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு ஆவலாய்க் கேட்பார்கள். உங்கள் குடும்பத்தை இரண்டு துண்டாக்க என்னென்ன யோசனைகள் தர முடியுமோ அதையெல்லாம் தருவார்கள். அப்படிதான் பல குடும்பங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி சிதைந்து போகின்றன.


எனவே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் குடும்பத்தை அதிகதிகமாக நேசியுங்கள். அதுதான் மிகப்பெரிய பலம். குடும்பத்தை நேசிக்கின்றவர்களதான் உலகத்தை நேசிக்க முடியும். உலகத்தை நேசிப்பவர்களால் தான் நல்ல உறவுகளை உருவாக்க முடியும்.


இல்லறத்தை நிலைக்களனாகக் கொண்டு இயங்குவதுதான் உலக வாழ்வு. இங்கு சிறப்போடு வாழ்வதற்குதான் குடும்பம் என்னும் கூட்டுறவு. அதில் தீங்கு நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இல்லறத்தாரின் கடமை.


'குடும்ப நண்பர்கள்' என்று கண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். முன்பின் அறியாதவர்களை வீட்டிற்கு வரவழைக்காதீர்கள். பேசுவதை மட்டுமே வைத்து யாரையும் நல்லவர்கள் என்று நம்பிவிடாதீர்கள். அப்படிப்பட்டவர்களால் கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு, பல குடும்பங்கள் தரைமட்டமாகிப் போயிருக்கின்றன.


உங்கள் குடும்பத்தின் நிம்மதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அனுமதிக்காதீர்கள். குடும்ப வாழ்வைக் கொண்டாடுங்கள். தாம்பத்திய சுகத்தை இணைந்து அனுபவியுங்கள். ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராய் இருங்கள். உங்கள் இல்லறம் செழிக்கும்; வாழ்வில் இன்பங்கள் தழைக்கும்.

வாழ்க வளமுடன் நலமுடன்....

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send