Briyani

Briyani

 

10 - வகையான பிரியாணி.........


கொங்கு நாட்டின் ஆட்டுக்கறி பிரியாணி !

❤️


தேவையான பொருள்கள்:

1. பிரியாணி அரிசி

2. ஆட்டுக்கறி

3. சின்ன வெங்காயம்

4. தக்காளி

5. இஞ்சி, பூண்டு, நெய்

6. பெரிய வெங்காயம்

7. கொத்தமல்லித் தழை

8. புதினா

9. பச்சை மிளகாய்

10. மிளகாய்த் தூள்

11. எலுமிச்சை

12. தயிர்

13. பட்டை, கிராம்பு, ஏலக்காய்

14. எண்ணெய், உப்பு


செய்முறை:

1. கறியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

2. பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

3. புதினா, கொத்தமல்லித் தழையை நன்கு நறுக்கிக் கொள்ளவும்.

4. மிளகாயை இரண்டாகக் கீறவும்.

5. இஞ்சி பூண்டை அரைக்கவும், சின்ன வெங்காயத்தை இடிக்கவும்.

6. பாதியளவு பட்டை கிராம்பை அரைத்துக் கொள்ளவும்.

7. அடி கனமான பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதி பட்டை, கிராம்பு, ஏலக்காய்யைப் போட்டுப் பொரிய விடவும்.

8. உடன் அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறியைப் போட்டு கறி வெள்ளை நிறம் ஆகும் வரையில் வதக்கவும்.

9. மேற்கண்ட படி வதங்கியதும், புதினா, கொத்தமல்லித் தழை, தக்காளியைச் சேர்த்துக் கிளறி, மசாலாவை உடன் சேர்க்கவும்.

10. இப்போது சுமார் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கறி மிருதுவாகும் வரையில் வேக வைக்கவும். அதுவரையில் அரிசியை நீரில் ஊறவைக்க மறக்காதீர்கள்.

11. இப்போது கறி நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் ஒன்றுக்கு ஒன்றரை வீதம் தண்ணீர் ஊற்றி உப்புப் போடவும்.

12. நன்கு தளதளவென கொதிக்கும் நேரத்தில் அரிசியைப் போட்டு, நெய்யைப் பரவலாக ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.

13. பிரியாணி வாசனை வந்த வுடன் பாத்திரத்தை கனத்த மூடியால் மூடவும். உடன் மேலே நெருப்புத் துண்டுகளைப் போட்டுப் பரப்பவும்.

14. சுமார் 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

15. மேலே உள்ள நெருப்புத் துண்டுகளால் பிரியாணி நன்கு வெந்து பதமாகி காணப்படும்.

16. இதோ, இப்போது சூப்பரான கொங்கு பிரியாணி தயார் ஆகி இருப்பதைக் காணலாம்.


ஆட்டு இறைச்சி ஆண்மை மற்றும் கண் பார்வைக்கு அதிக அளவில் நன்மை செய்யும். இதனை வாரம் இரு முறை சாப்பிட்டு வருபவர்கள் நன்கு திடகாத்திரமான உடல் வாகை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

❤️


தென்னிந்திய சிக்கன் பிரியாணி

❤️

தேவையான பொருள்கள்:

1. கோழிக்கறி

2. சீரக சம்பா பிரியாணி அரிசி

3. பெரிய வெங்காயம்

4. பூண்டு

5. இஞ்சி

6. இலவங்கம்

7. ஏலக்காய்

8. மஞ்சள்

9. உலர்ந்த திராட்சை

10. முந்திரிப் பருப்பு

11. கட்டித் தயிர்

12. கசகசா

13. பால்

14. மஞ்சள் தூள்

15. தனியா தூள்

16. இலவங்கப் பட்டை

17. நெய்

18. உப்பு


செய்முறை:

1. கோழிக்கறியை நன்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. பிரியாணி அரிசி அல்லது சீரகச் சம்பா அரிசியை நன்கு கழுவி அந்த ஈரத்துடன் இருபது நிமிட நேரம் வைத்திருங்கள். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில், சிக்கன் பிரியாணிக்கு பாசுமதி அரிசியை விட சீரகச் சம்பா அரிசி இன்னும் நன்றாக இருக்கும். அதாவது கூடுதல் சுவை சேர்க்கும் என்பதே.

3. இப்போது ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, கசகசா, மஞ்சள் தூள், தனியா தூள் ஆகிய இவற்றை எல்லாம் போட்டு அதில் சிக்கன் துண்டுகளையும் போட்டு நன்றாகக் கிளறி விட்டுப் பதினைந்து நிமிட நேரம் நன்கு ஊற வையுங்கள்.

4. வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஆகியவற்றை நறுக்கி இரு சமபாகங்களாகப் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

5. இப்போது அடுப்பில் பெரிய பாத்திரத்தை வைத்து மூன்று மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அது காய்ந்ததும் ஒரு பகுதி வெங்காயம், இஞ்சி, பூண்டு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆக்கியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

6. இப்போது தயிரில் ஊறிய சிக்கன் துண்டுகளைக் கொட்டி வேக வைக்க வேண்டும்.

7. ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி அதில் மஞ்சள் தூளைக் கரைத்துக் கொள்ளுங்கள்.

8. இப்போது மற்றோர் அடுப்பில் வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அது காய்ந்ததும் மீதி இருக்கும் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகிய இவற்றை எல்லாம் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு அரிசியைக் கொட்டி, நான்கு கப் தண்ணீர், மஞ்சள் தூள் கரைத்த பால், உப்பு ஆகிய இவற்றைச் சேர்த்து வேக விடுங்கள்.

9. இறுதியாக, அரிசி மிதமாக வெந்ததும் உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துக் கொட்டி, வெந்த சிக்கன் துண்டுகளையும் போட்டு நன்றாகக் கிளறி விட்டு ஒரு தட்டால் மூடி விடுங்கள்.

10. இதோ இப்போது பத்து நிமிட நேரத்திற்குப் பிறகு பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கினால் போதும். சுவையான சிக்கன் பிரியாணி தயார் ஆகி விடும்.


சிக்கனில் செலீனியம் என்னும் சத்து நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடும் போது, அதில் உள்ள செலீனியம், பிற்காலத்தில் மூட்டுகளில் வலி ஏற்படுவதை தடுத்துவிடும். மேலும், சிக்கனில் வைட்டமின் பி5 இருப்பதால், அவை நரம்புகளில் ஏற்படும் அதிர்வுகள், அழுத்தம், இறுக்கம் போன்றவற்றை குறைத்துவிடும்.

❤️


செட்டிநாடு மட்டன் ஃ பிரைட் ரைஸ்

❤️


தேவையான பொருள்கள்:

1. மட்டன் துண்டு

2. சாதம்

3. எண்ணெய்

4. முட்டைக் கோஸ் துருவல்

5. பூண்டுப் பற்கள்

6. முட்டை

7. மிளகுத் தூள்

8. உப்பு


செய்முறை:

1. அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு அது காயும் வரையில் காத்திருங்கள்.

2. இப்போது, அது காய்ந்ததும் நறுக்கப்பட்ட பூண்டுப் பற்களைப் போட்டு வதக்கி, சாதத்தைக் கொட்டிக் கிளறி விடுங்கள்.

3. சுமார் இரண்டு நிமிடங்களில் அந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளுங்கள்.

4. இப்போது வாணலியில் நான்கு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கி நன்கு கழுவப்பட்ட மட்டன் துண்டுகள், உப்பு, முட்டைக் கோஸ், மிளகுத் தூள் ஆகிய இவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

5. பிறகு மட்டன் துண்டுகள் வெந்ததும் சாதத்தைக் கொட்டிக் கிளறி விடுங்கள்.

6. சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்துக் கொண்டு அதையும் வாணலியில் கொட்டிக் கிளறி விடுங்கள்.

7. பத்து நிமிடங்களுக்குப் பிறகு வாணலியை இறக்கினால் போதும் இதோ இப்போது ருசியான செட்டிநாடு மட்டன் ஃ பிரைட் ரைஸ் தயார். சாப்பிட்டு மகிழுங்கள்.


மட்டனில் பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாசியம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவையுமான எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

❤️

செட்டிநாடு 5 ஸ்டார் இறால் பிரியாணி

❤️


தேவையான பொருள்கள்:

1. பெரிய இறால்

2. பாசுமதி அரிசி

3. பெரிய வெங்காயம்

4. தக்காளி

5. இஞ்சி - பூண்டு விழுது

6. புதினா

7. கொத்துமல்லித் தழை

8. தயிர்

9. பட்டை, இலவங்கம், பிரிஞ்சு இலை

10. பச்சை மிளகாய்

11. மிளகாய்த்தூள்

12. தனியா தூள்

13. எண்ணெய், உப்பு


செய்முறை:

1. முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

2. பிறகு பெரிய பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, இலவங்கம், பிரிஞ்சு இலை போட்டுத் தாளித்து, அதனுடன் கொத்தமல்லி, புதினா, வெட்டி வைத்த தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிய இவற்றையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

3. இப்போது மேற்கண்டவற்றுடன் இஞ்சி - பூண்டு விழுது, தயிர், இறால், மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, அதனுடன் அரிசியையும் போட்டு ரெண்டு நிமிஷம் கிளறவும்.

4. இப்போது மேற்கண்டவற்றுடன் ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் என்ற அளவில் தண்ணீரை ஊற்றி, நன்கு மூடி வைக்கவும்.

5. சுமார் 3 விசில் வரும் வரையில் காத்திருந்து, விசில் வந்தவுடன் ஸ்டவ்வை 5 நிமிடம் ஸிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

6. இதோ, இப்போது சுவையான இறால் பிரியாணி தயார்.


இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.


❤️

செட்டிநாடு கொத்துக்கறி பிரியாணி

❤️


தேவையான பொருள்கள்:

1. மட்டன் கொத்துக்கறி

2. பாசுமதி அரிசி

3. பெரிய வெங்காயம்

4. தக்காளி

5. இஞ்சி - பூண்டு விழுது

6. புதினா, கொத்தமல்லித் தழை

7. தயிர்

8. பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை

9. பச்சை மிளகாய்

10. மிளகாய்த்தூள்

11. தனியா தூள்

12. எண்ணெய், உப்பு


செய்முறை:

1. மட்டனை வாங்கும் போதே நன்றாகக் கொத்துக் கறியாக வாங்கிக் கொள்ள வேண்டும்.

2. சாதத்தை முக்கால் பாகம் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3. பட்டை, இலவங்கம் ஆகியவற்றை தாளித்து, சிறிதளவு புதினா, கொத்துமல்லியை உடன் வதக்கவும்.

4. பிறகு மேற்கண்டவற்றுடன் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளியைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை வதக்கிக் கொள்ளவும்.

5. பின்னர் இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, மீண்டும் தயிரை ஊற்றி வதக்கி, பிறகு அதில் கொத்துக் கறியையும் போட்டு நன்றாக வதக்கவும்.

6. இப்போது கொத்துக்கறி கலவை நன்றாக வதக்கியதும், அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு, கறி வெந்ததும் அதன் மீது வடித்து வைத்துள்ள சாதத்தைப் பரப்பி, அதன் மீது மீதமுள்ள புதினா, கொத்துமல்லி ஆகிய இவற்றை எல்லாம் போட்டுப், பாத்திரத்தை ஈரத்துணியால் மூடி, தட்டு வைத்து, ஸ்டவ்வை ஸிம்மில் வைத்து 25 நிமிடம் விட்டு விட வேண்டும்.

7. இதோ இப்போது ஈரத்துணி நன்றாக உலர்ந்ததும், பிரியாணி நன்கு வெந்து இருக்கும்.

8. இதோ இப்போது சுவையான செட்டிநாடு கொத்துக்கறி பிரியாணி சுடச் சுடத் தயார்.


விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைப்போர், மட்டனை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இதில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இது உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

❤️

செட்டிநாடு தம் பிரியாணி

❤️


தேவையான பொருள்கள்:

1. பாசுமதி அரிசி

2. மட்டன்

3. பெரிய வெங்காயம்

4. தக்காளி

5. இஞ்சி - பூண்டு விழுது

6. புதினா, கொத்தமல்லித் தழை

7. தயிர்

8. பட்டை, இலவங்கம், பிரிஞ்சு இலை

9. பச்சை மிளகாய்

10. மிளகாய்த் தூள்

11. தனியாத்தூள்

12. எண்ணெய், உப்பு


செய்முறை:

1. மட்டனை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கித் தயிரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

2. தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகிய இவற்றை எல்லாம் நன்கு நறுக்கிக் கொள்ளவும்.

3. அரிசியைக் கழுவி, முக்கால் பதத்துக்கு வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.

4. இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிப் பட்டை, இலவங்கம், பிரிஞ்சு இலையை தாளித்து, அரைக் கட்டுப் புதினா, அரைக் கட்டு கொத்தமல்லி போட்டுத், தக்காளி, வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.

5. இப்போது அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

6. பிறகு மட்டனை தயிரோடு சேர்த்துப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

7. மட்டன் நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய்த் தூள், தனியாத்தூள் போட்டுக் கிளறி உடன் ஒரு கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். (குக்கராக இருந்தால் 3 விசில் வரும் வரையில் வைத்து எடுக்கலாம்)

8. இப்போது மட்டன் 90 சதவீதம் வெந்ததும், தம் போட வேண்டும்.

9. ஏற்கனவே வேக வைத்த சாதத்தை, பாத்திரத்தில் உள்ள மட்டன் கிரேவியுடன் போட்டு, மீதி இருக்கும் புதினா, கொத்தமல்லியையும் அதன் மீது பரப்பி வைக்கவும். (தேவை என்றால் சிவப்பு ஃ புட் கலரை ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளவும்.)

10. பின்னர், சுத்தமான ஒரு ஈரத்துணியால் பாத்திரத்தை மூடிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

11. பிறகு பாத்திரத்திற்கு ஏற்றார் போல ஒரு தட்டினை வைத்து அதை மூடி, அதன் மீது ஏதேனும் ஒரு வெயிட்டை வைத்து விட வேண்டும்.

12. இப்போது ஸ்டவ்வை சிம்மிலேயே 25 நிமிடம் வைக்கவும்.

13. பாத்திரத்தின் மீது வைத்துள்ள துணி நன்றாக உலர்ந்து விடுவதே, பிரியாணி நன்றாக வெந்து விட்டதற்கான அடையாளம் ஆகும்.

14. பிறகு, இப்போது துணியை எடுத்துவிட்டு, பிரியாணியை பக்கவாட்டிலேயே லேசாகக் கிளறி எடுத்துப் பரிமாறவும்.

15. பின்குறிப்பு : பிரியாணியைச் சாப்பிடும் போது சிறிது எலுமிச்சை பழத்தை அதன் மீது பிழிந்து கொண்டால் ருசி அமோகமாக இருக்கும்.


மட்டன் இதயத்தை வலிமைப்படுத்தும். ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

❤️


வான்கோழி பிரியாணி

❤️


தேவையான பொருள்கள்:

1. பாசுமதி அரிசி

2. வான்கோழி இறைச்சி

3. வெங்காயம்

4. தக்காளி

5. கொத்துமல்லித் தழை

6. புதினா

7. தயிர்

8. இஞ்சி - பூண்டு விழுது

9. பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை

10. பச்சை மிளகாய்

11. தனியா தூள்

12. எண்ணெய், உப்பு


செய்முறை:

1. ஒரு கடாயில் பட்டை, இலவங்கம், பிரிஞ்சு இலை போன்றவற்றைப் போட்டுத் தாளித்து, நறுக்கிய தக்காளி, வெங்காயம், புதினா, கொத்துமல்லி ஆகிய அனைத்தையும் வரிசையாகப் போட்டு வதக்கி, இஞ்சி - பூண்டையும் உடன் சேர்த்து வதக்க வேண்டும்.

2. இவற்றுடன் பச்சை மிளகாய், வான் கோழிக் கறியைச் சேர்த்து வதக்கி, அரிசியையும் சேர்த்துக் கிளற வேண்டும்.

3. இப்போது மேற்கண்டவற்றுடன் தனியா தூளைச் சேர்த்துக் கிளறி உடன் தயிரையும் சேர்க்கவும்.

4. பின்னர் தண்ணீரை அளந்து ஊற்றி, குக்கரில் 3 விசில் வரும் வரையில் வைக்கவும்.

5. பிறகு அடுப்பை ஸிம்மில் 5 நிமிடம் வரையில் வைத்து இறக்கிப் பரிமாறவும்.

6. இதோ இப்போது சுவையான வான்கோழி பிரியாணி தயார்.


வான்கோழி இறைச்சியில் கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால்தான் பலராலும் விரும்பப்படுகிறது. பொதுவாக, இறைச்சிகளில் சிவப்பு இறைச்சி, வெள்ளை இறைச்சி என்று இரண்டு வகைகள் உண்டு. ஆடு, மாடுகளின் இறைச்சி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கும். கோழி மற்றும் மீன் இறைச்சி வெள்ளை நிறத்தில் இருக்கும். வெள்ளை இறைச்சியில் புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்கும். வான்கோழி இறைச்சி வெள்ளை இறைச்சி வகையைச்சேர்ந்தது. இதில் 22 சதவிகிதம் வரை புரதம் உள்ளது. தவிர நன்மை பயக்கும் தீங்கற்ற கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது.

❤️

இடியாப்ப கைமா தம் பிரியாணி

❤️


தேவையான பொருள்கள்:

1. இடியாப்பம்

2. மட்டன் கைமா

3. மஞ்சள் தூள்

4. இஞ்சி - பூண்டு விழுது

5. மிளகாய்த்தூள்

6. பச்சை மிளகாய்

7. பெரிய வெங்காயம்

8. தக்காளி

9. கரம் மசாலா

10. கொத்துமல்லித் தழை

11. எலுமிச்சை

12. கறிவேப்பிலை

13. எண்ணெய்

14. உப்பு


செய்முறை:

1. பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

2. இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும்.

3. எண்ணெயில் கரம் மசாலா, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.

4. இப்போது மேற்கண்டவற்றுடன் இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகிய இவற்றை எல்லாம் சேர்க்கவும்.

5. மேற்கண்ட இந்தக் கலவையை நன்கு கிளறி அதனுடன் கைமா கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

6. இவற்றுடன் கால் டம்ளர்  தண்ணீர் சேர்த்துக், குக்கரில் 3 விசில் வைக்கவும்.

7. மேற்கண்ட கலவை நன்கு கொதித்ததும், உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை அதனுடன் சேர்த்துக் கிளறி, உடன் எலுமிச்சை சாறு சேர்த்துக், கொத்துமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.


பெண்களுக்கு இரத்த சோகை கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  எனவே கருவுற்ற தாய்மார்கள் மட்டனை சாப்பிட்டால் அதில் உள்ள இரும்பு சத்து ஹீமோ குளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.  குறிப்பாக, கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழி வகுக்கும்.

❤️

செட்டிநாடு ஸ்டார் சிக்கன் பிரியாணி

❤️

தேவையான பொருள்கள்:

1. சீரகச்சம்பா அரிசி

2. சிக்கன்

3. இஞ்சி - பூண்டு விழுது

4. நறுக்கிய சின்ன வெங்காயம்

5. பச்சை மிளகாய்

6. மிளகாய்த்தூள்

7. மல்லித்தூள்

8. பட்டை, இலவங்கம்

9. தேங்காய்த்துருவல்

10. கசகசா

11. நெய்

12. எண்ணெய்

13. உப்பு


செய்முறை:

1. சீரகச் சம்பா அரிசியை நன்கு களைந்து, தண்ணீரை வடித்து விட்டுப் 15 நிமிடம் ஊற விடவும்.

2. இப்போது தேங்காய், கசகசா ஆகிய இவ்விரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3. நெய், எண்ணெயை வாணலியில் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.

4. மேற்கண்டவை வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகிய இவற்றுடன் சுத்தம் செய்து வைத்த சிக்கனையும் உடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.

5. இப்போது லேசாக ஒரு கொதி வந்ததும் தேங்காய், கசகசா விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.

6. உடன் மேற்கண்டவற்றுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து உடன் இரண்டே முக்கால் தம்ளர் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் 3 விசில் வைத்து, அடுப்பை ஸிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

7. இதோ இப்போது சுவையான செட்டிநாடு ஸ்டார் சிக்கன் பிரியாணி தயார். அவசியம் சுவைத்து மகிழுங்கள்.


குழந்தைகளின் வளர்ச்சிக்கு உள்ள சிறந்த உணவுகளில் சிக்கனும் ஒன்று. ஏனெனில் இதில் அதிகமான அளவில் அமினோ ஆசிட் இருப்பதால், அதனை குழந்தைகள் சாப்பிட்டால், உயரமாகவும், வலுவாகவும் இருப்பார்கள்.

❤️

செட்டிநாடு புதினா மட்டன் பிரியாணி

❤️

தேவையான பொருள்கள்:

1. மட்டன்

2. பாசுமதி அரிசி

3. தேங்காய்ப்பால்

4. இஞ்சி - பூண்டு விழுது

5. தக்காளி

6. வெங்காயம்

7. தயிர்

8. நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி

9. ஏலக்காய்

10. கிராம்பு, பிரிஞ்சி இலை

11. மஞ்சள் தூள்

12. மிளகாய்த் தூள்

13. கரம் மசாலாத்தூள்

14. நெய், எண்ணெய்

15. உப்பு


செய்முறை:

1. மட்டனை துண்டுகளாக வெட்டித் தயிரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

2. அரிசியை அரை வேக்காட்டில் வேக வைத்துக் கொள்ளவும்.

3. குக்கரில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலையைத் தாளித்து, வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

4. இப்போது மேற்கண்டவற்றுடன் மட்டன் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கிளறவும்.

5. பின்னர் மேற்கண்டவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

6. இப்படியாக கறி வெந்து மசாலா கெட்டியாகும் வரையில் வேக விட்டு எடுக்கவும்.

7. இப்போது ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் வேக வைத்த சாதம், உடன் வெந்தக் கறிக்கலவையை சேர்த்துக் கிளறவும்.

8. இதனை குறைந்த தீயில் சுமார் 15 நிமிடம் வைத்து வேகவிடவும்.

9. வெந்ததும் புதினா தழையைத் தூவிப் பரிமாறவும்.


மட்டன், இதயத்திற்கு நல்ல வலிமையை கொடுத்துச் சீராக செயல் பட உதவுகிறது. அத்துடன், நுரையீரல்களுக்கு வலிமையை கொடுத்து, குளிர்ச்சியையும்  கொடுத்து இயங்கச் செய்கிறது. பார்வை கோளாறுகளை சரி செய்து கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து நல்ல கண் பார்வையை கொடுக்கிறது. இதனை வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.

❤️

#தமிழ்நாடுரெசிப்பீஸ்

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send