Story-time
கவனமாய் இருங்கள்
கதைசொல்லிகளிடம்
'ம்' கொட்ட ஆரம்பித்தால்
உங்கள் கதையை
உங்களுக்கே
சொல்லத் தொடங்குவார்கள்
'ஆதியில் இருளாயிருந்தது' என்று
அதற்கும் முன்னால்
வாழ்ந்தவர்கள்போல
ஆரம்பிப்பார்கள்
பலிருசி அறிந்த
கொல்கத்தா காளியின் நாக்கைவிட
பயங்கரமானவை
கதைசொல்லிகளின் நாக்குகள்
நம் காதுகளை
நக்கி நக்கி
கேட்கும் சுகத்துக்கு
நம்மை மண்டியிட வைத்துவிடும்
கதைசொல்லிகள்
விக்ரமாதித்யன்களின்
தோள்வலி அறியாமல்
தலை வெடித்துவிடும் பயத்தினூடே
கதைகேட்பதை
தண்டனைகளாக்கிவிட்ட
வேதாளங்கள்
அவ்வை
நிலாவில் இருப்பதாய்ச் சொல்லி
அவளை
பூமியிலிருந்தே துரத்திவிட்டவர்கள்
வடை திருடியதாய்
திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்ட
அப்பாவிக் காகங்களின்
சாபத்திற்கு உள்ளானவர்கள்
ஒவ்வொரு வீட்டின் முன்னும்
காகங்கள் கரைவது
விருந்தாளிகள் வரக்கூடும் என்கிற
அறிவிப்பல்ல...
யாராவது
கதைசொல்லிகள் வந்துவிடக்கூடும்
என்கிற எச்சரிக்கைதான்
குடுகுடுப்பைக்காரன்
ஜோசியக்காரன்
சாமியாடி
எல்லோரும்
கதைசொல்லிகளின்
பிரதிநிதிகள்தாம்
திரையரங்கில்
பேருந்தில்
தொடர்வண்டியில்
உயிரச்சம் இருந்தால்
மூடி வையுங்கள்
உங்கள் காதுகளை
நமக்குப் பக்கத்தில் உட்காருகிறவன்
நம் காதுகளையே
நோட்டமிடுகிறவனாக இருக்கலாம்
தன் காதுகளைத்
தானே அறுத்துக்கொண்ட
வான்காவைப் போல
நான் தப்பித்துவிடுவேன்
ஒருவேளை
இந்தக் கவிதையின் மூலமாகக்கூட
அவர்கள் ஊடுருவி வரலாம்
உங்களிடம்
கவனமாய் இருங்கள்
கதை சொல்லிகளிடம்
Comments