அடம் பிடிக்கும் தருணத்தில் பெற்றோரின் அமைதி = குழந்தையின் பாதுகாப்பு
அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
அடிக்க வேண்டுமா ? இல்லை அமைதியை கடைப்பிடிக்க வேண்டுமா!
Dr Arshath Ahamed
ஒரு குழந்தை அடம் பிடிக்கும் தருணத்தில், அது “சரியில்லாத நடத்தை” என்று தோன்றலாம். நமது வளர்ப்பை பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்று எண்ணத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அந்த நேரத்தில் என்ன நடக்கிறது? குழந்தை ஏன் சொல் பேச்சு கேட்காமல் அடம்பிடிக்கிறது? என்பதை அறிந்து கொள்ள, குழந்தையின் மூளையில் நிகழும் இரசாயன மாற்றங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், அப்போது தான் நாம் கதைப்பதை கேட்கும் நிலையில் அவர்களின் மூளை இல்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். வளர்ப்பு முறைக்கும் அடம்படித்தலுக்கும் சம்பந்தம் இருக்கிறது ஆனால் நாம் நினைப்பது போன்ற ஒன்று அல்ல என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
ஒரு குழந்தை அடம் பிடிக்கும் போது,
👉 பயம், கோபம், பதற்றம் போன்ற தீவிர உணர்ச்சிகளைச் செயலாக்கும் அமிக்டலா (Amygdala) மூளையின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்கிறது. அந்த நேரத்தில், காரணங்களை புரிதல், அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளல் போன்றவற்றுக்குப் பொறுப்பான முன்முனைப் புறணி (PFC) தற்காலிகமாக “சுவிச் ஓஃப்” நிலையில் சென்றுவிடுகிறது. அதனால் தான் அந்த நேரத்தில் நாம் எவ்வளவு அதிகமாகப் பேசினாலும், வாதிட்டாலும், புரியவைக்க முயன்றாலும் அடம்பிடித்தல் நீடித்துச் செல்கிறது. குழந்தை நமது சொல் பேச்சு கேட்காமல் அடம்பிடிக்கிறது. இது நமது பிழை இல்லை. நமது குழந்தையின் பிழையும் இல்லை.
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்தும் படியுங்கள்...
🧒 ஒரு சிறிய சம்பவம்:
சூப்பர் மார்க்கெட்டில் ஒரு 3 வயது குழந்தை சோக்லேட் கேட்டு தரையில் உட்கார்ந்து அழுது புரள்கிறது. உடனே நமக்கு வெட்கமாகி விடுகிறது.
“நல்ல பிள்ளை மாதிரி இரு”,
“எல்லாரும் பார்க்கிறாங்க”, "அழாத தங்கம், வீட்ட சொக்லட் இருக்கு வா தாறன்" போன்ற எந்த வார்த்தைகளை சொன்னாலும் குழந்தை கேட்காது. நாம் பேசப்பேச, அழுகையும் அதிகமாகுமே அன்றி வேறு எதுவும் நடக்காது.
ஆனால் அதே இடத்தில், இன்னொரு பெற்றோர் குழந்தையின் அருகில் அமைதியாக உட்கார்கிறார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. குழந்தையை தூக்கி மடியில் வைத்து தலையை தடவி விடுகிறார்கள். குழந்தை அழுது அடம்பிடித்தாலும் அது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்கிறார்கள். சில நிமிடங்களில்…
அழுகை மெதுவாகக் குறைகிறது.
குழந்தை அமைதியாகிவிடுகிறது. இது தான் உண்மை. சரியான வழிமுறை.
சம்பவம் 2: ஒரு வீட்டில், 4 வயது குழந்தை, தூங்க வேண்டிய நேரத்தில் அடம் பிடிக்கிறது. அப்பா கோபமாக
“இன்னும் அழுதா உன்னை தூக்கி வெளியே போடுவேன்!”என்று சொல்கிறார். அதை கேட்ட குழந்தை
அழுகையை இன்னும் அதிகரிக்கிறது.
அம்மா ஓடி வந்து, எதுவும் பேசாமல் குழந்தையை அணைக்கிறார். கொஞ்ச நேரம் குழந்தை அதை எதிர்க்கிறது. பிறகு உடலை தளர்க்கிறது.
அழுகை நின்று, குழந்தையும் தூங்கி விடுகிறது. இந்த இடத்தில், அரவணைப்பு, வார்த்தைகளை விட வலிமையான வேலையை செய்கிறது. அப்படித்தானே!!!
அமைதியான இருப்பு, மென்மையான தொடுதல், அருகில் இருப்பது,
இவை குழந்தையின் நரம்பு மண்டலத்துக்கு “நீ பாதுகாப்பாக இருக்கிறாய்” என்ற செய்தியை அனுப்புகிறது. அப்போதுதான் வயலன்டாக வேலை செய்யும் அமிக்டலா அமைதியாகிறது. அதன் பின்னரே குழந்தையின் முன் மூளை மீண்டும் “கேட்கத் தயாராகிறது”. விஷயங்களை விளங்கி கொள்ள ரெடியாகிறது.
அடம் பிடிப்பது ஒரு தவறான நடத்தை அல்ல. அது ஒரு தொடர்பு.
“எனக்கு சோர்வாக இருக்கிறது”,
“எனக்கு அதிகமாக தேவை”,
“எனக்கு உதவி வேண்டும்”
என்று வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு மூளை, உணர்ச்சிகளால் பேசுவது தான் அடம். அதற்கு எதிராக நாம் கோபத்தையும், அதிக வார்த்தைகளையும் சேர்த்தால், அது குழந்தைகளுக்கு இன்னும் ஒரு சுமையை அதிகரிக்கும்.
இதற்கு மாறாக, அடம்பிடிக்கும் குழந்தைகளிடம் நாம் ஒவ்வொரு முறையும் அமைதியாக, உறுதியுடன் பதிலளிக்கும்போது, குழந்தையின் மூளை மெதுவாக அதே அமைதியை கற்றுக்கொள்கிறது:
“உணர்ச்சிகள் வந்தாலும், நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.
இவை கடந்து போகும்.” என்பதை குழந்தை கற்றுக் கொள்கிறது. இப்படி செய்வதால், இன்று நாம் குழந்தையைச் சீராக்குகிறோம். அதன் மூளையை சீராக்குகிறோம். நாளை, அதே மூளை தன்னைத் தானே சீராக்கக் கற்றுக்கொள்கிறது. மன அழுத்தத்திலிருந்து எப்படி மீள்வது? தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்வது எப்படி என்பதை மூளை மெதுவாக கற்றுக் கொள்ளும். அதை நாங்கள் அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு முதலில் இவ்வாறான நிலைமைகளில் அமைதியாக இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆகவே, குழந்தைகள் அடம் பிடிக்கும் தருணத்தில்:
குறைவாகப் பேசுங்கள்.
அருகில் இருங்கள்.
பொறுமையுடன் இருங்கள்.
அமைதியாக இருப்பது ஒரு பலவீனம் அல்ல. அது குழந்தையின் மூளைக்கு நாம் வழங்கும் மிக வலுவான பாதுகாப்பும் வழிகாட்டலும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
#Parenting #ChildBrain #EmotionalRegulation #GentleParenting #Neuroscience #TamilParenting

Comments